பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

பிரதாப முதலியார் சரித்திரம்

ஆனால் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தது போல நான் தரித்துக் கொண்டிருக்கிற ஆண் வேஷமே முழு மோசமானதால் அதை ஸ்தாபிக்கிறதற்கு இத்தனை பொய்களினுடைய சகாயம் வேண்டியிருக்கிறது” என்று சொல்லிப் பெருமூச்செறிந்தாள்.

மகாராஜாவாகிய ஞானாம்பாளும் உபராஜாவாகிய நானும் சிங்காசனம் ஏறி ராஜ்ஜிய பரிபாலனஞ் செய்யத் தொடங்கினோம். செங்கோல் கோணாமலும் மநுநீதி தவறாமலும் வர்ணாசாரங்கள் பேதிக்காமலும் மாதமும்மாரி பெய்யவும் முப்போகம் விளையவும் ஆறில் ஒரு கடமை வாங்கி அரசாக்ஷி செய்தோம். முந்தின அதிகாரத்தில் விவரித்தபடி, ராஜாக்கள் பிரஜைகளுக்குச் செய்யவேண்டிய அனுகூலங்களையெல்லாம் குறைவறச் செய்தோம். தேவாலயம் தர்மசத்திரம் பாடசாலை வைத்தியசாலை பல தொழிற்சாலை முதலியவைகளிற் பழமையாயிருந்தவைகளையெல்லாம் புதுப்பித்தோம். இல்லாத கட்டடங்களை நூதனமாகக் கட்டுவித்தோம். ஜீரணமாயிருந்தவைகளை ஜீரயோத்தாரணஞ் செய்தோம்.

பழைய ராஜாங்கத்தில் உத்தியோக நியமன விஷயத்தில் நடந்திருந்த அக்கிரமங்களை யெல்லாம் நாங்கள் திருத்திச் சீர்ப்படுத்தினோம். எப்படியென்றால், “அறுக்க மாட்டாதவன் இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள்” என்கிற பழமொழிப்படி ஒரு வேலை கூடப் பார்ர்க்கச் சக்தியில்லாதவனுக்கு ரிவினியூ வேலை, மாஜிஸ்திரேட்டு வேலை, சிவில் விவகார வேலை முதலிய பல வேலைகள் கொடுக்கப்பட்டிருந்தன. பலசரக்குக் கடைக்காரனைப் பயித்தியம் பிடித்ததுபோல், அந்த அதிகாரி ஒரு வேலையையாவது சரியாய்ப் பார்க்காமல் எல்லா வேலைகளையும் போட்டுக் குழப்பிக்கொண்டு காலம் போக்கினான். நாங்கள் ஒவ்வொரு வேலையையுந் தனியே பிரித்து ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு உத்தியோகஸ்தனைப் பிரத்தியேகமாக நியமித்தோம். இருகாத வழி முக்-