பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரதியற்‌ சீர்திருத்தங்கள்‌

285

நோக்கி “இவரை அரசராகத் தெரிந்துகொள்ள அநேகர் அபேக்ஷித்ததாக நீங்கள் சொல்லுகிறபடியால் இவரை உபராஜாவாக வைத்துக்கொண்டு ராஜ்ஜியபாரஞ் செய்ய வேண்டுமென்பது என்னுடைய ஆசத்தியமாயிருக்கிறது. அதற்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்றாள். உடனே அவர்கள் “இவருடைய மகிமையை நாங்கள் பிரத்தியக்ஷமாக அறிந்திருக்கிறோமாதலால் அவர் உங்களுக்கு உபராஜாவாயிருக்க எங்களுக்குச் சம்மதந்தான். நீங்களிருவரும் அரோகதிகாத்திரராய் நெடுங்காலம் அரசாளும்படி கடவுள் அநுக்கிரகிப்பார்” என்று சொல்லி உத்தரவு பெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். அவர்கள் போன பிற்பாடு நான் ஞானாம்பாளைப் பார்த்து “உன்னுடைய சாமர்த்தியமே சாமர்த்தியம். நீ நினைத்தபடி நிறைவேற்றிவிட்டாய். நான் இன்னானென்று அவர்களுக்குத் தெரிவித்த விஷயத்தில் நீ ஒரு பொய்யையுங் கலக்காமல் உண்மையையே பேசினாய். பிரியன், அன்பன், காவலன், துணைவன் என்கிற வார்த்தைகளினால் நான் உனக்குப் பர்த்தாவென்று தெரிவித்தாய். ஆனால் அந்த வார்த்தைகளை நீ உபயார்த்தமாக உபயோகித்தபடியால் நான் உனக்குப் பிரியமான நேசன், சிறு பருவமுதல் நான் உனக்குத் துணையாயிருந்தவன், காவலாயிருந்தவனென்று அவர்கள் அர்த்தம் பண்ணியிருப்பார்களே யன்றி நான் உனக்குக் கணவனென்று கிரகித்திருக்க மாட்டார்கள். இவ்வளவு வாக்குச் சாதுரியமாகப் பேச யாருக்காவது வருமா?” என்றேன். அவள் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு “நீங்கள் பொழுது விடியாமற் போகவும் பிறகு விடியவுஞ் செய்த சாமர்த்தியமும் என்னுடைய வாய்ச் சாமர்த்தியமும் இரண்டும் சமானந்தான். மனதிலே கபடத்தை வைத்துக்கொண்டு சிலேஷையாக ஒருவரிடத்திற் பேசுவது பொய்தானே. நம்முடைய வார்த்தைக்குப் பிறர் தப்பான அர்த்தஞ் செய்கிறார்களென்று தெரிந்தவுடனே அவர்களைத் திருத்தாமலிருப்பதுங் கரவடம் அல்லவா?