பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

பிரதாப முதலியார் சரித்திரம்

யத் தொகைக்குத் தக்கபடி முந்தி வரி கொடுக்கவேண்டுமென்றும், வரி கொடாதவர்களுடைய வழக்கை அங்கீகரிக்கக் கூடாதென்றும் சட்டம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அந்த சட்டம் அக்கிரமமென்று நாங்கள் மாற்றிவிட்டோம். ஏனென்றால் ஜனங்களுக்குச் சரீரத்துன்பம் இல்லாமலும் சொத்து நஷ்டமில்லாமலும் ரக்ஷிக்க வேண்டியது ராஜாக்களுடைய பிரதான கடமையாய் இருக்கிறது. அதற்காகவே நிலவரி வீட்டுவரி முதலான வரிகள் வாங்கப்படுகின்றன. அந்தக் காரணத்தைப் பற்றியே சரீரத் துன்பம் களவு முதலிய குற்ற விஷயங்களில் ஒரு வரியும் வாங்காமல் ராஜாவே வாதியாயிருந்து, துன்ப நிவாரணம் செய்கிறான். அப்படியே சில வியவகாரங்களிலும் ராஜாவே வாதியாயிருந்து சொத்து நஷ்டம் அடைந்தவர்களிடத்தில் யாதொரு வரியும் வாங்காமல் அவர்களுக்கு நஷ்டப்பரிகாரம் செய்யவேண்டியது நியாயமா யிருக்கிறது. முன்னமே பொருள் நஷ்டம் அடைந்து வியாஜ்ஜியம் கொண்டுவருகிறவனைப் பார்த்து, “நீ நமக்கு வரியுங் கொடுத்தால்தான் உன் வழக்கை அங்கீகரிப்போம்” என்று சொல்லுவது எவ்வளவு நியாயம்! துன்பப் பட்டவர்களுக்கு யாதொரு செலவும் இல்லாமல் துஷ்டநிக்கிரகம் சிஷ்டபரிபாலனம் செய்யவேண்டியது ராஜாக்களுடைய முக்கியமான கடமை யல்லவா? நியாயபரிபாலனத்துக்கு வரி வாங்குவது துஷ்டர்களுக்கு அநுகூலமாயும் சிஷ்டர்களுக்குப் பிரதிகூலமாயும் முடியுமல்லவா? வியாஜ்ஜியங்களுக்கு வரி வாங்காவிட்டால், துர்வியாஜ்ஜியங்கள் அதிகரிக்குமென்று சிலர் சொல்லுகிறார்கள். ஒருவன் துர்வியாஜ்ஜியம் கொண்டுவந்ததாக ருசுவான பிற்பாடு அவனை மட்டுந் தண்டிப்பது கிரமமே யல்லாமல், துர்வழக்குகள் வருமென்கிற காரணத்துக்காக நியாய வழக்குகளிலும் முந்தியே வரி வாங்குவது அக்கிரமமல்லவா? ஒரு ஊரில் குற்றவாளி இன்னானென்று தெரியாம லிருக்கும் போது, அந்த ஊரில் உள்ளவர்களை