பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியாயவாதிகள்‌ கொடுமை

311

களை வக்கீல் விவரிக்கிற விஷயத்தில் கக்ஷிக்காரன் சொன்னபடி விவரிக்க வேண்டுமே யல்லாது நூதன சங்கதிகளைச் சிருஷ்டிப்பதும் கக்ஷிக்கரனுக்குச் சாக்ஷி திட்டம் பண்ணிக்கொடுப்பதும் வக்கீலுடைய வேலையல்ல. சில வக்கீல்கள் எதைக் கிரமமென்று ஒரு வழக்கில் வாதித்தார்களோ அதைத் தானே அக்கிரமென்று வேறொரு வழக்கில் வாத்திக்கிறார்கள். பிள்ளைகளுக்குத் தகுந்த வயது வராமலிருக்கும் போது தகப்பன் எந்தக் காரணத்தைப் பற்றியும் சொத்துக்களை விநியோகஞ் செய்யக் கூடாதென்றும், அப்படி விநியோகஞ் செய்தால் தகுந்த வயது வந்த உடனே பிள்ளைகள் ஆக்ஷேபிக்கலாமென்றும், ஒரு வழக்கில் வக்கீல் வாதிக்கிறார். பிறகு அந்த வழக்கில் தானே அன்றைத் தினம் விசாரணையாகிற வேறொரு வழக்கில் பிள்ளைகள் பாலியர்களாயிருக்கும்போது தகப்பன் எதேச்சா விநியோகம் செய்யலாமென்றும் பிள்ளைகள் ஒரு காலத்திலும் அதை ஆக்ஷேபிக்கக் கூடாதென்றும் வாதிக்கிறார். யாதொரு காரணமு மில்லாமல் புருஷனை விட்டு வெளிப்பட்டுப் போய்விட்ட ஸ்திரீக்குப் புருஷன் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமென்று ஒரு வழக்கில் வக்கீல் வாதிக்கிறார். அதே விதமான வேறொரு வழக்கில் புருஷன் பெண்சாதிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய தில்லையென்று வாதிக்கிறார். இப்படியாகச் சமயத்துக்குத் தக்கபடி வழக்குக்கு வழக்கு பரஸ்பர விரோதமாக வக்கீல் செய்யும் வாதம் துர் வாதம் அல்லவா?

சகல வழக்குகளிலும் சாஸ்திரமும் நியாயமும் ஒரே தன்மையா யிருக்குமேயல்லாது வழக்குக்கு வழக்கு பேதிக்குமா? ஆனால் நடந்த சங்கதிகளிலும் விஷயாந்தரங்களிலும் பேதமிருக்குமானால் அந்தந்த வியாஜ்ஜிய விதிக்குத் தக்கபடி வெவ்வேறு விதமாக வாதிப்பது கிரமமே. எப்படியென்றால் தகப்பன் ஊதாரியாயும் ஆராதூரிக்காரனாயும் துர்த்தனாயுமிருந்து, சிறு பிள்ளைகளுடைய ஹிதத்துக்கு விரோதமாக சொத்துக்களைத் துர்விநியோகம் செய்திருப்பானானால், அந்த விநியோகம் செல்லா-