பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

பிரதாப முதலியார் சரித்திரம்

களுக்குச் சரியான பிரத பதங்கள் தமிழில் இல்லாமையாலும் தாங்கள் இங்கிலீஷ் பாஷையை உபயோகிப்பதாக சில வக்கீல்கள் சொல்லுகிறார்கள். இங்கிலீஷ் வார்த்தைகளுக்குச் சரியான பிரதி பதங்கள் தமிழில் இல்லையென்று வக்கீல்கள் சொல்லுவது அவர்களுடைய தெரியாமை யல்லாமல் உண்மையல்ல. தமிழ் நூல்களைத் தக்கபடி அவர்கள் ஆராய்ந்தால் பிரதி பதங்கள் அகப்படுவது பிரயாசமா? அப்படித் தான் இரண்டொரு சங்கேத வார்த்தைகளுக்குத் தமிழிலாவது சம்ஸ்கிருதத்திலாவது பிரதிபதங்கள் அகப்படாத பக்ஷத்தில் அந்த வார்த்தைகளை மட்டும் இங்கிலீஷிலே பிரயோகித்தால் அவர்களை யார் கோபிக்கப் போகிறார்கள்? தமிழிலே வாதித்தால் இங்கிலீஷ் மறதியாய்ப் போகுமென்கிற பயத்தினால் சிலர் இங்கிலீஷிலேயே வாதிக்கிறார்கள். அவ்வளவு சொற்பத்தில் மறந்து போகிற இங்கிலீஷ் இந்த வக்கீல்களுடன் எத்தனை நாள் கூடி வாழப்போகிறது? வக்கீல்கள் இங்கிலீஷில் வாதிப்பது அக்கிரமமென்று சில தமிழ் நியாயாதிபதிகளுக்குத் தெரிந்திருந்தும் அதைக் கண்டித்தால் தங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதென்று வக்கீல்களும் மற்றவர்களும் நினைப்பார்களென்று எண்ணி இங்கிலீஷ் வாதத்திற்கு இடங் கொடுத்து வருகிறார்கள். பின்னும் அந்த நியாயாதிபதிகளும் கோர்ட்டுகளில் எப்போதும் இங்கிலீஷையே உபயோகப் படுத்தி, அநேக நடவடிக்கைகளை இங்கிலீஷிலேயே நடத்துகிறார்கள். சில சமயங்களில் வக்கீலும் நியாயாதிபதிகளும் இங்கிலீஷை நன்றாகப் படியாதவர்களானதால் ஒருவர் சொல்லுவது ஒருவருக்குத் தெரியாமல் கை சாடை செய்துகொண்டு சர்வ சங்கடப்படுகிறார்கள். அந்த கோர்ட்டுகள் நாடகசாலையாகத் தோன்றுகின்றனவே யல்லாமல் நியாயசபையாகத் தோன்றவில்லை. ஒவ்வொரு வழக்கிலும் உண்மையைக் கண்டுபிடித்து நீதி சொல்லவேண்டியது கோர்ட்டாருடைய கடமையா யிருக்கிறது. ஜனங்களுக்குத் தெரிந்த பாஷையிலே வக்கீலினுடைய