பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியாயவாதிகளும்‌, நியாயாதிபதிகளும்‌

313

வாதிக்கிறார்களென்று கேள்விப் படுகிறோம். தேச பாஷையும் தமிழ்! கோர்ட்டில் வழங்காநின்ற பாஷையும் தமிழ்! நியாயாதிபதியும் தமிழர்! வாதிக்கிற வக்கீலும் தமிழர்! மற்ற வக்கீல்கள் கக்ஷிக்காரர்கள் முதலானவருந் தமிழர்களே! இப்படியாக எல்லாந் தமிழ் மயமாயிருக்க அந்த வக்கீல்கள் யாவருக்குப் பிரீதியாப்தமாக இங்கிலீஷில் வாதிக்கிறார்களோ தெரியவில்லை! அப்படி வாதிக்கிறதினால் அவர்களுக்குத் தான் என்ன சிலாக்கியம்? மற்றவர்களுக்குத் தான் என்ன பாக்கியம்? நியாயாதிபதியாவது அல்லது வக்கீலாவது இங்கிலீஷ்காரராயிருக்கிற பக்ஷத்தில் இங்கிலீஷில் வாதிப்பது நியாயமா யிருக்கலாம். தமிழ் நியாயாதிபதி முன்பாக தமிழ் வக்கீல் இங்கிலீஷில் வாதிப்பது ஆச்சரியமல்லவா? ஜனங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதாகையால் ஐரோப்பியர்கள் கூட இத் தேச பாஷையில் பரீக்ஷை கொடுக்க வேண்டுமென்றும், அவர்கள் தேச பாஷையிலே சம்பாஷிக்க வேண்டுமென்றும் சட்டம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அந்தப்படி பரீக்ஷை கொடுத்து வருவதுமின்றி கக்ஷிக்காரர்களிடத்தில் தேச பாஷையிலேயே சம்பாஷிக்கப் பிரியப் படுகிறார்கள். அப்படி யிருக்க சுதேசிகளான வக்கீல்கள் சொந்தப் பாஷையைத் தள்ளிவிட்டு அந்நிய பாஷையில் வாதிப்பது அசந்தர்ப்ப மல்லவா? தங்களுக்குத் தமிழில் நன்றாகப் பேசத் தெரியாமையினால் இங்கிலீஷில் வாதிப்பதாகத் தங்களுக்குக் கௌரவம் போலச் சொல்லுகிறார்கள். சுய பாஷை பேசத் தெரியாமலிருப்பதைப் போல இழிவான காரியம் வேறொன்றிருக்கக் கூடுமா? ஒரு ஐரோப்பியர் தம்முடைய சுய பாஷையில் பேசத் தெரியாதென்று சொன்னால் இந்த வக்கீல்களே அவரைப் பழிக்க மாட்டர்களா? அப்படியே தங்களுடைய சுயபாஷையில் தங்களுக்கு வாதிக்கத் தெரியாதென்று சொல்வது அவர்களுக்கு அவமானமல்லவா?

நியாய சாஸ்திரங்களெல்லாம் இங்கிலீஷ் பாஷையிலிருப்பதாலும் இங்கிலீஷிலிருக்கிற நீதி வாக்கியங்-