பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

பிரதாப முதலியார் சரித்திரம்

வாதிப்பது இங்கிலீஷ் தெரியாத மற்ற வக்கீல்களுக்கு அவமானம் அல்லவா? அவர்களுடைய வருமானத்துக்குக் குறைவல்லவா? தமிழ் நியாயாதிபதி முன்பாக இங்கிலீஷில் வாதிக்கிற தமிழ் வக்கீல்கள் இந்தத் தமிழ் நாட்டையும், தமிழ் பாஷையையும் மற்ற வக்கீல்களையும், கக்ஷிக்காரர்களையும், சகல ஜனங்களையும் மெய்யாகவே அவமானப் படுத்துகிறார். அவருடைய வாதம் யாவருக்குங் கர்ணக் கடூரமாயிருப்பதால் அவர் எப்போது நிறுத்துவாரோ வென்று எல்லாருங் கடுகடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்கள் முகம் இருக்கிற கோரத்தை இந்த வக்கீலே திரும்பிப் பார்ப்பாரானால் அப்பால் ஒரு வார்த்தை கூடப் பேச அவருக்குத் தைரியமுண்டாகாது. இப்படியாக அந்த வக்கீல்களுடைய வாதம் அபவாதமாக முடிகிறபடியால் நீங்களும் அவர்களைப் போல அந்நிய பாஷைகளில் வாதிக்காமல் தமிழிலே வாதிப்பீர்களென்று நம்புகிறோம்.

புலியைப் பார்த்து நரி சூடிட்டுக்கொண்டது போல, இங்கிலீஷில் வாதிக்கிற வக்கீல்களைப் பார்த்து இங்கிலீஷ் நன்றாகத் தெரியாத சில வக்கீல்களும், அரைப் படிப்பைக் கொண்டு அம்பலமேறுவது போல, இங்கிலீஷில் வாதிக்கத் துணிகிறார்கள். அவர்கள் சொல்வது கோர்ட்டாருக்குத் தெரியாமலும், கோர்ட்டார் சொல்வது அவர்களுக்குத் தெரியாமலும், அவஸ்தைப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வக்கீல் ஒரு பெரிய ஜமீன்தாருக்கு வக்கீலாயிருந்தார். அந்த வக்கீலினுடைய இங்கிலீஷ் வாதத்தினாலேயே அந்த வழக்கு அபஜெயமாய்ப் போய் ஜமீன்தாருக்கு விரோதமாய்க் கோர்ட்டார் இங்கிலீஷில் ஒரு பெரிய சித்தாந்தம் எழுதிப் படித்தார். அந்தச் சித்தாந்தம் ஜமீன்தாருக்கு அநுகூலமென்று வக்கீல் பிசகாக எண்ணிக்கொண்டு ஜமீன்தாருடைய ஊருக்குப் போய், அவர் பக்ஷம் தீர்ப்பானதாகத் தெரிவித்தார். அதைக் கேட்டவுடனே, ஜமீன்தாருக்கு ஆநந்தம் உண்டாகி, வக்கீலுக்கு அளவற்ற வெகுமானம்