பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய்‌ மொழியை வளர்த்தல்

317

செய்ததுமன்றி, கோயிலுக்குக் கோயில் அபிஷேகங்களும் தான தர்மங்களும் ஏழைகளுக்குக் கலியாணங்களும் விருந்துகளும் வேடிக்கைகளும் செய்தார். கோர்ட்டார் தீர்மானம் சொன்ன அன்றைத் தினமே கோடைக் காலத்துக்காக இரண்டு மாசக் காலம் கோர்ட்டு நிறுத்தப்பட்டு, எல்லாரும் அவரவர்களுடைய ஊர்களுக்குப் போய்விட்டதால், ஜமீன்தாருக்கு உண்மை தெரிய இடமில்லாமற் போய் விட்டது. அவர் வரப்போகிற வியாஜ்ஜியச் சொத்தை நம்பி, கையிலிருந்த சொத்துக்களை யெல்லாம் மேற் கூறியபடி விருதா விரயஞ் செய்துவிட்டார். கோர்ட்டு திறந்து உண்மை தெரிந்த உடனே, ஜமீன்தாருக்கும் வக்கீலுக்கும் என்ன பிரமாதம் நடந்திருக்குமென்பதை நான் சொல்ல வேண்டுவ தில்லையே!

இங்கிலீஷ் அரசாட்சியில் வக்கீல்களைப் போலவே மற்ற உத்தியோகஸ்தர்களும் வித்தியார்த்திகளும் சுதேச பாஷைகளை நிகிர்ஷ்டம் செய்கிறார்கள். ““ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்தினது”” போல இங்கிலீஷ் பிரென்சு முதலிய அந்நிய பாஷைகள் மேலிட்டு தேச பாஷைகளின் சீரைக் குலைத்துவிட்டன. அந்த ராஜ பாஷைகள் ஜீவனத்துக்கு மார்க்கமாயிருக்கிற படியால், அநேகர் வயிறே பெரிதென்று எண்ணி அந்தப் பாஷைகளை மட்டும் அதிக சிரத்தையாகப் படிக்கிறார்கள். ராஜாங்கத்தாருடைய சகாயம் இல்லாமலிருக்குமானால் சில வருஷங்களுக்கு முன்னமே சுதேச பாஷைகள் இருந்த இடந் தெரியாமல் அப்பிரசத்தமாய்ப் போயிருக்கும். ராஜாங்கத்தார் சுதேஷ பாஷைகளைச் சில பரீக்ஷைகளுடன் சேர்த்து அவைகள் இந்நாளளவும் ஜீவித்திருக்கும்படி ஆதரித்து வந்தார்கள். இப்போது அவர்களே உபேக்ஷையாயிருப்பதால் சுதேஷ பாஷைகளுக்கு நாளுக்கு நாள் ஜீவதாது குறைந்து வருகின்றது. வித்தியார்த்திகளுடைய இஷ்டப்படி சுதேஷ பாஷைகளையாவது அல்லது லத்தீன் (Latin), சமஸ்கிருதம் முதலிய பாஷைகளையாவது படிக்கலாமென்று துரைத்தனத்தாரே நியமனம்