பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

பிரதாப முதலியார் சரித்திரம்

செய்திருப்பதால், சுதேஷ பாஷைகளுக்கு ஜீவாந்த காலஞ் சமீபித்திருக்கின்றது. சென்னைப் பட்டணம் செனட் (Senate) என்னும் ஆலோசனைச் சங்கத்தைச் சேர்ந்த அநேக பிரபுக்கள் சுதேச பாஷையை ஆதரிக்காமல் விட்டு விட்டார்கள். ஆனால் அந்தச் சங்கத்தில் இரண்டொரு சுதேசக் கனவான்கள் அத்தியாவஸ்தையிலிருக்கிற சுதேச பாஷைகளுக்குப் பிராணதாரங் கொடுத்துக் காப்பாற்றி வருகிறார்கள். இங்கிலீஷ்காரர்கள் தங்களுடைய சுதேசங்களில், இங்கிலீஷையாவது அல்லது வேறெந்தப் பாஷையையாவது இங்கிலீஷ் பிள்ளைகள் படிக்கலாமென்று உத்தரவு செய்தார்களா? அப்படி ராஜாங்கத்தார் உத்தரவு செய்தாலும் ஜனங்கள் இங்கிலீஷ் பாஷையை விட்டுவிட்டு அந்நிய பாஷையை அப்பியசிப்பார்களா? அப்படியிருக்க இந்தத் தேசத்தார் சொந்தப் பாஷைகளையாவது அல்லது எந்தப் பாஷைகளையாவது படிக்கலாமென்று இங்கிலீஷ் துரைத்தனத்தார் உத்தரவு செய்திருப்பதும், அந்த உத்தரவைச் சுதேச கனவான்கள் ஆக்ஷேபிக்காமல் சும்மா இருப்பதும் நியாயமா? நம்முடைய தேசாசாரங்களையுங் குல சம்பிரதாயங்களையும் அதிகாரிகள் விட்டுவிடச் சொன்னால் விட்டுவிடுவோமா? மத்தியில் உண்டான தேசாசாரங்களைப் பார்க்கிலும் ஆதிகாலமுதல் உண்டாயிருக்கிற தேச பாஷை அதி உத்கிருஷ்டமல்லவா?

எண் ணிறந்த தேவாலயங்களும், பிரமாலயங்களும், அன்ன சத்திரங்களும், நீர்வளமும், நிலவளமும், நாகரிகமும், ஆசார நியமங்களும் நிறைந்த இந்தத் தமிழ்நாடு, மற்றைய நாடுகளிலும் விசேஷமென்றும், அப்படியே தமிழ் பாஷையும் சர்வோத்கிருஷ்ட மான பாஷை யென்றும் சகலரும் அங்கீகரிக்கிறார்கள். அகஸ்தியர் நாவிலே பிறந்து, ஆரியத்தின் மடியிலே வளர்ந்து, ஆந்திரம் முதலிய பாஷைகளின் தோழமைபெற்று, சங்கப் புலவர்களுடைய நாவிலே சஞ்சரித்து, வித்வான் களுடைய வாக்கிலே விளையாடி, திராவிட தேசம் முழுதும் ஏக சக்ராதிபத்தியஞ் செலுத்தி வந்த தமிழ் அரசியை இப்போது இகழலாமா?