பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழின்‌ அருமை பெருமை

319

நம்மைப் பெற்றதும் தமிழ் வளர்த்ததும் தமிழ் நாட்டைத் தாலாட்டித் தூங்க வைத்ததும் தமிழ். நம்முடைய மழலைச் சொல்லால் நமது தாய் தந்தையரைச் சந்தோஷிப்பதுந் தமிழ். நாம் குழந்தைப் பருவத்தில் பேச ஆரம்பித்தபோது முந்தி உச்சரித்ததுந் தமிழ். நம்முடைய அன்னையுந் தந்தையும் நமக்குப் பாலோடு புகட்டினதுந் தமிழ். தாய், தந்தை, குரு முதலானவர்கள் நமக்கு ஆதியில் உபதேசித்ததுந் தமிழ். ஆதிகாலம் முதல் நம்முடைய முன்னோர்களெல்லோரும் பேசின பாஷையும் எழுதிவைத்த பாஷையுந் தமிழ். இப்போதும் நம்முடைய மாதா பிதாக்களும் பந்து ஜனங்களும் இஷ்ட மித்திரர்களும் இதரர்களும் பேசுகிற பாஷையும் தமிழ். நம்முடைய வீட்டு பாஷையுந் தமிழ். நாட்டு பாஷையுந் தமிழ். இப்படிப்பட்ட அருமையான பாஷையை விட்டுவிட்டு சம்ஸ்கிருதம் லத்தீன் முதலிய அந்நிய பாஷைகளைப் படிக்கிறவர்கள், சுற்றத்தார்களை விட்டு விட்டு அந்நியர்களிடத்தில் நேசஞ் செய்கிறவர்களுக்குச் சமானமாயிருக்கிறார்கள். ஆபத்துக் காலத்தில் சுற்றத்தார் உதவுவார்களே யல்லாது அந்நியர்கள் எப்படி உதவ மாட்டார்களோ அப்படியே எந்தக் காலத்திலும் நமக்கு சுய பாஷை உதவுமே யல்லாமல், அந்நிய பாஷைகள் உதவுமா? லத்தீனுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் சொந்தக்காரர்கள் இல்லாமையால் அவைகள் இறந்துபோன பாஷைகளாயும் தமிழ் முதலிய தேச பாஷைகள் ஜீவிக்கிற பாஷைகளாயும் இருக்கின்றன. பல பாஷைக்காரர்கள் ஒருவருடன் ஒருவர் கலந்து பேசும்போது ஒருவருடைய கருத்தை வெளிப்படுத்துவதுமே பாஷாந்தரங்களைப் படிப்பதனால் உண்டாகிற முக்கியப் பிரயோஜனமா யிருக்கிறது. ஒரு பாஷைக்குச் சொந்தக்காரர்களே இல்லாமலிருப்பார்களானால், அந்தப் பாஷையை நாம் படித்து யாரிடத்திலே சம்பாஷிக்கப் போகிறோம்? சமஸ்கிருதம், லத்தீன் முதலிய பாஷைகள் அதிகக் கடினமும் வருத்தமுமான பாஷைகளாயும் சீக்கிரத்தில் மறந்துபோகத் தக்கவைகளாயும் இருக்கின்றன. அவைகளின் இலக்கணம், இலக்கியம்,