பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XXXVI

நிறை வாழ்வு பெறுதல்:

இங்ஙளம் நல்லறிஞர் பலரின் நட்புக்கும், பாராட்டுக்கும் உரிய பண்பாளர், நல்ல நீதியாளர், நற்றமிழ்ப் புலவர், உரைநடை வேந்தர், புதின முதல்வர், பெண்ணினத்திற்குப் பெருமை தந்தவர், உண்மைக் கிறிஸ்தவர் ஆகிய நம் வேதநாயகருக்கும் வாழ்வின் இறுதி நெருங்கியது. மண்ணில் எவர்க்கும் மரணமிலாப் பெருவாழ்வு வாய்க்காதன்றோ? . வேதநாயகர் தம் இறுதிக் காலத்து, ‘மகோதரம்’ (Dropsy) என்ற வீக்க நோயால் வேதனைப்பட்டார். மருத்துவம் பயனளிக்கவில்லை. தனது இறுதிநேரம் நெருங்குவதை உறுதியாக உணர்ந்தார். திருமறை குருக்களைத் தன் இல்லத்திற்கு அழைத்து, இறுதித் திருவருட் சாதனங்களைப் பெற்றார். தனது நல்ல நண்பர்களுக்கும் தனக்கு உதவியவர்களுக்கும் உரிய வகையில் நன்றி தெரிவித்துக் கடிதங்கள் எழுதி அவர்களிடமிருந்து விடை பெற்றார். 1889 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 21 ஆம் நாள் இரவு 11 மணிக்கு மண்ணுலகை நீத்து விண்ணுல எய்தினார். அவரது ஆன்மா இறைவனோடு நிறை வாழ்வு வாழ்வதாக!

நன்றி: வேதநாயகம் பிள்ளை நினைவுக் குழு