பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342

பிரதாப முதலியார் சரித்திரம்

அவர்கள் எல்லாரும் போனபிறகு ஞானாம்பாள் என்னைப் பார்த்து துக்க முகத்துடனே சொல்லுகிறாள்:- “விளையாட்டுச் சண்டை வினைச் சண்டையானது போல நான் ஆண்வேஷம் பூண்டுகொண்டு பேடிசம் பண்ணினது இவ்வளவு பிரமாதமாய் விளைந்திருக்கிறது. நான் ஆதியிலே உண்மையைச் சொல்லியிருந்தால் இவ்வளவு விபரீதம் நேரிடுமா? என்னுடைய ஆண் வேஷத்தை எத்தனை நபர்கள் மோசம் போகிறார்கள்? முக்கியமாக அந்த ராஜபுத்திரியினுடைய நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. அந்தப் பிரபுக்கள் சொல்வது வாஸ்தவமா யிருக்கிற பக்ஷத்தில் அவளை நான் கொள்ளமாட்டேனென்று நிராகரிப்பதாக கேள்விப்படும்போது அவளுக்கு எத்தனை துக்கத்திற்கு இடமாயிருக்கும்? தாய் தகப்பன் இல்லாத ஒரு அருமையான பெண்ணை, நாம் இவ்வகையாக துன்பப்படுத்துவது தகுமா? அது பெண் துரோகம் அல்லவா? ஆகையால் காரியம் இன்னும் பிரமாதமாய் வளருவதற்கு முன் உண்மையைச் சொல்லிவிடுவது உத்தமமாகக் காணப்படுகிறது. நாளைத்தினம் அவர்கள் வந்து கேட்கும்போது நான் பெண்ணென்பதை அவர்களுக்குத் தெரிவிக்க யோசித்திருக்கிறேன்” என்றாள். நான் அவளைப் பார்த்து “நீ சொல்வதெல்லாம் வாஸ்தவந்தான். ஆனால் இப்போது உண்மையை வெளிவிடுவது விவேகமாய்த் தோன்றவில்லை. ஜனங்கள் எல்லாரும் உன்னை புருஷனென்றே நினைத்துச் சகல உபசார மரியாதைகளும் வணக்கமுஞ் செய்து வருகிறார்கள். நீ பெண்ணென்று திடீரென்று கேள்விப்பட்ட மாத்திரத்தில் அவர்களுடைய புத்தி எப்படியிருக்குமோ தெரியாது. இந்தத் தேசத்தார் ஸ்திரீகளை நிதிருஷ்டமாக எண்ணி அவர்களைப் பட்டாபிஷேகத்துக்கு யோக்கியர்கள் அல்லவென்று நினைக்கிறார்கள். அன்றியும் நாம் அநேக உத்தியோகஸ்தர்களையும் படைகளையும் நீக்கி அநேக ருடைய விரோ-