பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசருக்கு மணம்‌ செய்விக்க முயலுதல்

341

பிள்ளை நீங்களே! உங்களுக்குத் தக்க பெண் அந்தப் பெண்ணேயன்றி வேறில்லை” என்றார்கள். இதைக் கேட்டவுடனே ஞானாம்பால் திடுக்கிட்டுத் திகைத்து ஒன்றும் பேசாமல் என் முகத்தைப் பார்த்தாள். அவள் பொய் பேசுகிறவளாயிருந்தால், சமயானுகூலமாக எப்படியாவது பொய் சொல்லித் தப்பித்துக்கொள்ளுவாள். பொய்யுஞ் சொல்லக் கூடாமல் மெய்யுஞ் சொல்லக்கூடாமல் இருந்தபடியால் அவள் இவ்வாறு மலைப்பதற்கு இடமாயிற்று. நான் அந்தப் பிரபுக்களைப் பார்த்து “நீங்கள் சொல்லுவது பெரிய காரியமானதால் உடனே எப்படி மறுமொழி சொல்லக்கூடும்?” என்றேன். அவர்கள் என்னைப் பார்த்து “உபராஜப் பிரபுவே! இந்த விஷயத்தில் ஆலோசிக்கவேண்டிய சங்கதி என்ன இருக்கிறது? பெண்ணினுடைய குணத்தைப் பற்றி விசாரிக்கப் போகிறீர்களா? அல்லது குலத்தைப் பற்றி விசாரிக்கப் போகிறீர்களா? எல்லா விஷயமும் உங்களுக்குத் தெரிந்தது தானே. இன்றைக்கு மறுமொழி சொல்லக் கூடாவிட்டாலும், நாளைக்காவது எங்களுடைய இஷ்டப்படி மறுமொழி சொல்ல வேண்டும். உபராஜாவாகிய நீங்கள் அந்த மகாராஜாவுக்குச் சொல்லி அகத்தியம் எங்கள் இஷ்டப்படி நிறைவேற்றவேண்டும். அந்த ராஜ கன்னியின் மனம் மகாராஜாவை நாடியிருப்பதால் மகாராஜா அந்தப் பெண்ணை வேண்டாமென்றால் பெண்பாவம் அல்லவா? ஆகையால் நீங்களும் முயற்சி செய்து இந்தக் காரியத்தை நிறைவேற்றினால் உங்களுக்கும் வேறே பெண் தேடி விவாகஞ் செய்விக்கிறோம். அநுகூலமான மறுமொழியைக் கேட்பதற்காக நாளைக்கு ஆவலுடனே வருவோம்” என்று சொல்லிவிட்டு எல்லாரும் போய்விட்டார்கள். அவர்கள் போன வகையைப் பார்த்தால் தங்களுடைய வார்த்தையை நாங்கள் அர்த்தாங்கீகாரம் பண்ணிக்கொண்டதாக நினைத்துப் போனதாகத் தோன்றிற்று. எனக்கும் பெண் தேடி விவாகஞ் செய்வதாக அவர்கள் சொன்னவுடனே துயர முகமாயிருந்த ஞானாம்பாளுக்கும் புன்னகை உண்டாகிப் பிறகு அடக்கிக் கொண்டாள்.