பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340

பிரதாப முதலியார் சரித்திரம்

மாய் வந்திருந்தபடியால், நாங்கள் ஆச்சரியம் அடைந்து “என்ன விசேஷம்?” என்று வினவினோம். வயோதிகர்களான சில பிரபுக்கள் எழுந்து ஞானாம்பாளைப் பார்த்து “மண்டலேச்வரா! மகிபரிபாலா!! நாங்கள் ஒரு பெரிய காரியத்தை உத்தேசித்து வந்திருக்கிறோம். தாங்கள் ஒரு ஆக்ஷேபமுஞ் சொல்லாமல் எங்களுடைய மனோரதத்தை நிறைவேற்றவேண்டும்” என்றார்கள். ஞானாம்பாள் அவர்களை நோக்கி “நீங்கள் உத்தேசித்திருக்கிற காரியம் புக்தமாயும் சாத்தியமாயும் இருக்கிற பக்ஷத்தில் அந்தப்படி செய்யத் தடையில்லை. ஆனால் காரியம் இன்னதென்று தெரிந்துகொள்ளாமல், முந்தி வாக்குத்தத்தம் செய்வது சரியல்லவே” என்றாள். அந்தப் பிரபுக்கள் ஞானாம்பாளைப் பார்த்து “நீங்கள் கலியாணமில்லாமல் பிரமசாரியா யிருப்பது எங்களுக்குப் பெரிய மனோவியாகூலமா யிருக்கிறது. தக்க பருவத்தில் கலியாணஞ் செய்யாதிருப்பதால் உங்களுடைய தேகம் நாளுக்கு நாள் இளைத்துப் போகின்றது. நீங்கள் சுகமாயிருந்தால் தானே எங்களுக்குச் சுகம் உண்டு. நாங்கள் எத்தனையோ உபகாரங்களைப் பெற்றுக் கொண்டோம். உங்களுக்கு நாங்கள் என்ன உபகாரஞ் செய்யப் போகிறோம்? உங்களுடைய கலியாண மகோற்சவத்தைப் பார்க்க வேண்டுமென்று எங்கள் கண்கள் அபேக்ஷிக்கின்றன. எங்களுடைய முந்தின ராஜாவின் மகளுடைய அழகுங் குணமும் உங்களுக்கு நன்றாய்த் தெரியும். அந்தப் பெண்ணினுடைய பாட்டியார் முதலான பந்துக்களுடைய கருத்தையும் அறிந்தோம். அவர்கள் எல்லாரும் அந்தப் பெண்ணை உங்களுக்குக் கன்னிகாதானஞ் செய்யப் பூரண சம்மதமாயிருக்கிறார்கள். அந்தப் பெண்ணினுடைய கருத்துந் தங்களையே நாடியிருப்பதாகவுந் தெரிந்து கொண்டோம். உங்களையும் அந்தப் பெண்ணையும் அதிர்ஷ்டம் வந்து மடியைப் பிடித்து இழுக்கும்போது நீங்கள் வேண்டாம் என்பீர்களா? அந்தக் கன்னிகாரெத்தினத்துக்குத் தக்க மாப்-