பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞானாம்பாள்‌ கவலை

339

கள் அந்த ராஜபுத்திரிக்கு மகுடஞ் சூட்டச் சம்மதிப்பார்களோ, சம்மதியார்களோ தெரியவில்லை. அன்றியும் இந்த நாடு மலைகளாலும் சமுத்திரங்களாலும் சூழப்பட்டிருப்பதால் நம்முடைய ஊருக்கு எந்த மார்க்கமாய்ப் போகிறதென்றுந் தெரியவில்லை. அந்த விவரங்களெல்லாந் தெரிந்துகொண்டு பிறகு அந்த ராஜ கன்னிகைக்கு மகுடாபிஷேகஞ் செய்விப்பதைப் பற்றி யோசிக்கலாம். அது வரையில் நம்முடைய எண்ணம் பிறர் அறியாதபடி ரகசியமாயிருக்க வேண்டும். ராயரும் அப்பாஜியும் அரசாண்ட காலத்தில் டில்லிப் பாச்சா ஒரே மாதிரியான மூன்று விக்கிரகங்களை அனுப்பி அவைகளின் தாரதம்மியங்களைத் தெரிவிக்கும்படி நிருபம் அனுப்பினான். மூன்றும் ஒரே தன்மையாயிருந்தபடியால் அவைகளின் உயர்வு தாழ்வு தெரியாமல் எல்லோரும் மயங்கினார்கள். அப்பாஜி அந்த விக்கிரகங்களின் காதுத்தொளை வழியாக ஈர்க்குகளை விட்டுப் பார்த்தான். ஒரு விக்கிரகத்தின் காதிலே விட்ட ஈர்க்கு, மற்றொரு காது வழியாகப் புறப்பட்டது. இன்னொரு விக்கிரகத்துக்கு வாய் வழியாகப் புறப்பட்டது. மற்றொரு விக்கிரகத்தின் காது வழியாய் விட்ட ஈர்க்கு, வெளியே வராமல் உள்ளே தங்கிவிட்டது. அந்த மூன்றாவது விக்கிரகம் போல எவன் ரகசியங்களை வெளியே விடாமல் உள்ளே அடக்குகிறானோ, அவன் உத்தமனென்றும், எவர்கள் காதினால் கேட்டதை வெளியே விட்டு விடுகிறார்களோ, அவர்கள் மத்திமரும் அதமரென்றும் அப்பாஜி பொருள் விடுவித்தான். அப்படிப் போல் நாமும் ரகசியங் காப்பாற்றவேண்டும்” என்றேன். நான் சொன்னது சரியென்று ஞானாம்பாளும் அங்கீகரித்துக் கொண்டாள்.

அதற்குச் சிலநாளைக்குப் பின்பு ஒரு நாட்காலையில், மந்திரி பிரதானிகள் முதலிய பெரிய உத்தியோகஸ்தர்களும், பெரிய பிரபுக்களும், இன்னும் அநேக ஜனங்களும், அரண்மனையில் வந்து ராஜசேவைக்குக் காத்திருப்பதாகக் கேள்விப்பட்டு, நானும் ஞானாம்பாளும் எழுந்துபோய் வந்தவர்களுக்குப் பேட்டி கொடுத்தோம். அவர்கள் பெருங் கூட்ட-