பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

பிரதாப முதலியார் சரித்திரம்

அவர்கள் பிராணனையும் வைத்திருப்பார்களா? அவர்களை இன்னொரு தரங் காண்போமா? அவர்களுடைய அமிருத வாசகத்தைக் கேட்போமா? என்னுடைய அத்தையாரைப் போலப் புண்ணியவதிகளை நான் எந்த உலகத்திலே காணப்போகிறேன்?” என்று சொல்லி முத்துமாலைபோற் கண்ணீர் விட்டுத் தேம்பினாள். அதைக் கேட்டவுடனே எனக்குஞ் சகிக்கக் கூடாத சஞ்சலம் உண்டாகிச் சிறிது நேரம் பொருமினேன். மறுபடியும் ஞானாம்பாள் என்னைப் பார்த்து “உங்களுடைய பிரியத்துக்காக இதுவரையும் அபாரமான இந்த ராஜாங்க பாரத்தைச் சுமந்தேன். இனி மேற் சுமக்க என்னால் முடியாது. இருக்கிற இடந் தெரியாமல் எவ்வளவோ அடக்க ஒடுக்கமாயிருக்க வேண்டிய ஸ்திரீ ஜாதியாகிய நான் புருஷவேஷம் பூண்டுகொண்டு எத்தனை நாளைக்குக் கஷ்டப்படுவேன்? இனி என்னால் நிர்வகிக்கச் சாத்தியமில்லாதபடியால் நீங்கள் என் தலைமேலே தூக்கிவைத்த பாரத்தை இறக்கிவிடும்படி கிருபை செய்யப் பிரார்த்திக்கிறேன்” என்றாள் நான் அவளைப் பார்த்து ““நான் செய்ய வேண்டிய காரியம் இன்னதென்று சொன்னால் உடனே அந்தப்படி செய்கிறேன்”” என்றேன்.

ஞானாம்பாள் என்னைப் பார்த்து ““நம்முடைய ஊரில் நமக்கு என்ன பாக்கியங் குறைவாயிருக்கிறது? இந்த ஊர்க் குடிகளுடைய சௌக்கியத்துக்காக நாம் இந்த அரசாக்ஷியத்தை ஏற்றுக் கொண்டதே யல்லாது, நமக்கு ஏதேனும் லாபம் உண்டா? குடிகளுக்கு வேண்டிய சௌக்கியங்களையும் சட்ட திட்டங்களையும் நாம் ஏற்படுத்திவிட்ட படியால், இனி மேல் இந்த ஊரை ஆளுகிறவர்களுக்கு அதிகப் பிரயாசம் இராது. இந்த ஊரை முன்னே ஆண்ட ராஜாவின் புத்திரியாகிய ஆநந்தவல்லி கூடிய வரையிற் கல்வி கற்று குணசாலியாகவும் பட்டத்துக்கு யோக்கியமாயும் இருப்பதால், அவளுக்குப் பட்டாபிஷேகஞ் செய்வித்து நாம் நம்முடைய ஊருக்குப் போவது நன்மையென்று நினைக்கிறேன்”” என்றாள். நான் ஞானாம்பாளைப் பார்த்து 'உன்னுடைய இஷ்டப்படி நடக்க என்னால் ஆடங்கமில்லை. ஆனால், அந்த ஜனங்-