பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசர்‌ மணம்‌ செய்ய மறுத்தல்‌

345

வழக்கமாயிருக்கின்றது. நாங்கள் அப்படிச் செய்யத் துணியாமல் உங்களுடைய சம்மதத்தை கேட்கவே வந்திருக்கிறோம். இத்தனை ஜனங்களுடைய பிரார்த்தனையை நிராகரிப்பது நியாயமா? எங்களை பாராவிட்டாலும் தாய்தகப்பன் இல்லாத அந்தப் பெண் முகத்தையாவது பாருங்கள்! அந்தப் பெண் உங்களை வேண்டுமென்று விரும்பும்போது நீங்கள் வேண்டாமென்று தள்ளிவிடுவது பெண் துரோகம் அல்லவா?”” என்றார்கள்.

ஞானாம்பாள் ““அந்தப் பெண்ணுக்காக இவ்வளவு பரிந்து பேசுகிற நீங்கள் அந்தப் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான நன்மையைச் செய்யாமலிருக்கிறீர்கள். அந்த நன்மையைச் செய்தால் ராஜராஜாக்களெல்லோரும் அந்தப் பெண்ணை விரும்புவார்களே!“” என்றாள்.

ஜனங்கள் ““அந்தப் பெண்ணுக்கு நாங்கள் என்ன நன்மை செய்யாமல் விட்டுவிட்டோம்? அது இன்னதென்று உத்திரவானால் இந்த நிமிஷத்தில் செய்கிறோம். இது சத்தியம் சத்தியம்“” என்றார்கள்.

ஞானாம்பாள் “““அந்தக் கன்னிகையினுடைய தகப்பனார் புருஷ சந்ததியில்லாமல் இறந்துபோன உடனே பாராம்பரை பாத்தியக் கிரமப்படி அந்தப் பெண்ணுக்கு பட்டாபிஷேகம் செய்யவேண்டியது நியாயமாயிருக்க, நீங்கள் அந்தப்படி செய்யத் தப்பிப் போய்விட்டீர்கள்! ஒரு ராஜா இறந்த உடனே பாராம்பரை பாத்தியகிரமத்தை அனுசரிக்காமல் புது ராஜாவை நியமிக்கிறதாயிருந்தால் பெரிய கலகங்களுக்கு ஆஸ்பதமாகும். எப்படியென்றால் பலவானாயிருக்கிற ஒவ்வொருவனுந் தன்னை நியமிக்கவேண்டும் தன்னை நியமிக்கவேண்டுமென்றும் வல்லடி வழக்குச் செய்வான். ஒவ்வொருவனுடைய கட்சியிலும் பலபேர் சேர்ந்து யுத்தந் தொடங்கி ஒருவரையொருவர் மாய்த்துக் கொள்வார்கள். நியாய பரிபாலனம் நடவாமல் நின்று போகு-