பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரச குமாரிக்கு முடி சூட்ட ஆலோசனை

347

இருக்கிறது. யானையினுடைய கையிலே பூமாலையைக் கொடுத்து யார் கழுத்திலே போடுகிறதோ அவனை அரசனாக நியமிப்பது இந்த ஊர் வழக்கமாயிருக்கிற்து. மனுஷர்களுடைய யோக்கியதை யானைக்கு எப்படித் தெரியக்கூடும்? அது ஒரு மூடன் கழுத்திலே மாலையைப் போட்டாலும் அவனை அரசனாக ஏற்றுக் கொள்ளவேண்டியதுதானே! அதைப் பார்க்கிலும் இறந்து போன ராஜாவினுடைய பாத்தியஸ்தர்களையே நியமிப்பது சர்வ சிலாக்கியம் அல்லவா? உங்களுடைய அதிர்ஷ்ட வசத்தால் உங்களுடைய பழைய ராஜாவின் குமாரத்தி பட்டாபிஷேகத்திற்குச் சகல விதத்திலும் யோக்கியதை உள்ளவளாகயிருக்கிறாள். அந்தப் பெண்ணுக்கு மகுடஞ் சூட்ட நீங்கள் ஒரு ஆக்ஷேபமுஞ் சொல்லமாட்டீர்களென்று நம்புகிறேன்” என்றாள்.

ஜனங்கள் “மகாராஜாவே! உங்களைப் போல தர்மராஜாக்கள் இந்த பூமண்டலத்தில் இருப்பார்களா? தங்களுடைய பட்டத்தை வேறொருவருக்குக் கொடுக்க யாராவது சம்மதிப்பார்களா? தகப்பன் ஜீவந்தனாயிருக்கும்போதே தன் பிள்ைளைக்குப் பட்டாபிஷேகஞ் செய்யச் சம்மதிக்கிறதில்லை. இப்போது ரரஜாக்கள் ஒரு சொற்ப தேசத்தைச் சம்பாதிப்பதற்காக எத்தனை உயிர்களைக் கொன்று எவ்வளவோ பாடுபடுகிறார்கள். புராணங்களிலே சொல்லப்பட்ட இராமன், தர்மன், அரிச்சந்திரன், நளன் முதலிய அரசர்கள் கூட நிர்ப்பந்தத்தினால் சில நாள் ராஜாங்கத்தை விட்டு நீங்கியிருந்தார்களே யல்லாது மனப்பூர்வமாய் விட்டவர்கள் ஒருவருமில்லை. அந்த அரசர்கள் எல்லாரும் உங்களுக்குச் சமானமாவார்களா? இப்படிப்பட்ட தர்ம ராஜாவை நாங்கள் ஒருகாலத்திலும் விடுவோமா? எங்களுடைய அபீஷ்டப்படிக்கும் உங்களுடைய மனோபீஷ்டப்படிக்கும், அந்த ராஜ கன்னிகைக்கு மகுடமும் மாலையுஞ் சூட்டி, நீங்கள் மூவரும் கூடி அரசு புரிவதைக் காண விரும்புகிறோம்” என்று சொல்லி சர்வ ஜனங்களும் விடை பெற்றுக்கொண்டு போய்விட்டார்கள்.