பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தவல்லிக்குக்‌ கடிதம்‌

355

களிடத்தில் உன்னுடைய பட்டாபிஷேகத்தைக் குறித்துப் பேசினேன். அவர்களும் என்னுடைய வார்த்தையை அங்கீகரித்துக் கொண்டார்கள். பிறகு உனக்கும் எனக்கும் விவாகமும் பட்டாபிஷேகமும் ஒரே தினத்தில் நடப்பதாக என்னுடைய அநுமதியில்லாமல் ஜனங்கள் பேரிகை முழங்கிப் பிரசித்தஞ் செய்தபடியால் இனி மேல் அவ்விடத்தில் இருப்பது சரியல்லவென்று நினைத்து நானும் என் நாயகரும் வெளிப்பட்டு வந்து விட்டோம். உனக்கும் மற்றவர்களுக்கும் உண்மை தெரியாதானபடியால் நானும் அவ்விடத்திலிருந்து மாலை சூட்ட நிராகரித்தால் உனக்குப் பெரிய மனஸ்தாபமும் அவமானமும் நேரிடுமென்பதை நினைத்தே நான் சொல்லாமல் வந்து விட்டேன். இனி மேல் நான் ஆணென்பதை நீ சுத்தமாய் மறந்துவிட்டு உன்னுடன் கூடப் பிறந்த சகோதரி போல என்னைப் பாவிக்க வேண்டும். நான் புருஷனென்று நினைத்து என்னிடத்தில் நீ வைத்த நேசமானது நான் பெண்ணென்று தெரிந்த பிறகும் மாறாமலிருக்குமென்று நம்புகிறேன். முந்தின ராஜாவுடைய புத்திரியான உனக்குப் பிராகிருத ராஜாத்தியாகிய நான் என்னுடைய ராஜ்ஜியத்தை உதகதாரா பூர்வமாகத் தத்தஞ் செய்கிறபடியாலும், சகல ஜனங்களும் உன்னை ராஜாத்தியாக அங்கீகரித்துக் கொண்டு முரசு அறைவித்திருப்பதாலும், இனி நீயே அரசியென்பதற்கு ஐயமில்லை. ஆகையால் உன்னுயிர் போல மன்னுயிரைத் தாங்கி அரசாக்ஷி செய்யும்படி சுவாமி உனக்குப் போதுமான ஞானத்தையும் திறமையையும் அநுக்கிரகிக்கும்படி அவரைப் பிரார்த்திக்கிறேன்.

இங்ஙனம்,
ஞானாம்பாள்

அந்த நிருபத்தோடு கூட, மந்திரி பிரதானிகள் முதலான உத்தியோகஸ்தர்கள் நடக்கவேண்டிய கிரமங்களைப் பற்றி, அவர்களுக்கும் நிருபங்கள் அனுப்பினோம்.