பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

பிரதாப முதலியார் சரித்திரம்

சில நாளாய் ஆதியூரில் நாங்கள் தங்கியிருந்து போக வேண்டுமென்று தேவராஜப் பிள்ளை கனகசபை முதலானவர்கள் வருந்திக் கேட்டுக்கொண்ட படியால் நாங்கள் அந்தப் பிரகாரஞ் சில நாள் தங்கியிருந்தோம். நாங்கள் விக்கிரமபுரிக்கு அனுப்பிய நிருபங்கள் போய்ச் சேர்ந்தவுடனே ஆநந்தவல்லி மந்திரி பிரதானிகள் முதலிய அதிகாரிகளும், இன்னும் அநேக பிரபுக்களும், ஜனங்களும் எங்களைக் கண்டுகொள்வதற்காக ஆதியூருக்கு வந்தார்கள். ஆநந்தவல்லி முன்னே புருஷ வடிவமாகப் பார்த்த ஞானாம்பாளை இப்போது பென் வடிவமாகக் கண்டவுடனே பிரமித்து மதிமயங்கி முகம் மாறி முத்து முத்தாகக் கண்ணீர் வடித்தாள். அதைக் கண்டவுடனே ஞானாம்பாளும் மனம் உருகி அழுதாள். என்னுடைய தாயார் அவர்கள் இருவரையும் பிரத்தியேகமாய் அழைத்து வைத்துக் கொண்டு ஆநந்தவல்லி மனந்தேறும்படியாக அநேக உறுதிகளைச் சொன்னார்கள். ஆநந்தவல்லி ஒருவாறு மனந்தேறின பிறகு அவள் ஞானாம்பாளைப் பார்த்து “அக்கா! எனக்குத் தாயுந் தந்தையுமாயிருந்த சகல உபாகாரங்களையுஞ் செய்து நீங்கள் என்னை அந்தரத்தில் விட்டுவிட்டு வந்து விடலாமா? ஒன்றுந் தெரியாத சிறு பேதையாகிய நான் எப்படி ராஜாங்கத்தை வகிப்பேன்? ஆகையால் நீங்களும் உங்கள் நாயகரும் வந்து முன்போல் அரசு செய்யவேண்டும்” என்று மிகவும் நைச்சியமாகப் பிரார்த்தித்துக் கொண்டாள். அப்படியே மந்திரி பிரதானிகள் முதலிய மற்றவர்களும் வேண்டிக் கொண்டார்கள். ஞானாம்பாள் ஆநந்தவல்லியைப் பார்த்து “ராஜபுத்திரியாகிய உனக்கே அந்த ராஜாங்கம் சொந்தம். அதில் பிரவேசிக்க எங்களுக்குப் பாத்தியமும் இல்லை; இஷ்டமும் இல்லை. நான் குடித்தன முறையை அநுசரித்து என்னுடைய நாயகர் மாமனார் மாமியார் முதலானவர்களை உபசரிக்க வேண்டியவளே தவிர நான் அரசு செய்வது தகுதி அல்ல” என்றாள். என்ன நியாயம் சொல்லியும் ஆநந்தவல்லி ஒப்புக் கொள்ளாமல், அசந்-