பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352

பிரதாப முதலியார் சரித்திரம்

ஊர் வழியாக நாங்கள் போகும்பொழுது ஞானாம்பாளுக்கு அம்மைக் கொப்புளங்கள் உண்டாகி எங்களுடைய பயணத்தை நிறுத்தும்படியாகச் சம்பவித்தது. ஞானாம்பாளுக்கு அந்தப் பயங்கரமான வியாதி கண்டவுடனே எங்களுக்கு உண்டான பயத்தையும் வியாகூலத்தையும் நான் எப்படி விவரிக்கப் போகிறேன்? அந்த ஊரிலே வசிக்கிறதற்குத் தகுந்த சத்திரமாவது சாவடியாவது இல்லாமலிருந்தபடியால், நாங்கள் கூடாரம் அடிக்க யத்தனமாயிருந்தோம். அப்போது “அம்மை கண்டவர்களையெல்லாம் அந்த ஊரிலுள்ள கவர்ன்மெண்டு வைத்திய சாலைக்குக் கொண்டுபோய் வைத்தியம் பார்க்கவேண்டுமென்றும், அப்படிச் செய்யாமல் வீடுகளிலாவது மார்க்கங்களிலாவது அந்த வியாதியஸ்தர்களை யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்றும் கவர்ன்மெண்டால் தண்டோரா மூலம் விளம்பரஞ் செய்தார்கள். ஞானாம்பாளை வைத்தியசாலைக்குக் கொண்டுபோக மனமில்லாமல் நாங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது அவள் வியாதியாயிருப்பது எப்படியோ சில இங்கிலீஷ் டாக்டர்களுக்குத் தெரிந்து அவர்கள் எங்களிடத்தில் வந்து அம்மை கண்ட ஸ்திரீகளுக்கு வைத்தியசாலையில் இங்கிலீஷ் துரைசானிகள் (English Doctors) வைத்தியஞ் செய்வதால் ஒரு குறைவும் உண்டாகாதென்றும், ஞானாம்பாளை உடனே வைத்தியசாலைக்கு அனுப்பவேண்டுமென்றும் முஷ்கரஞ் செய்தார்கள். நாங்கள் அந்தப் பிரகாரம் ஞானாம்பாளை வைத்தியசாலையிற் கொண்டுபோய் விட்டோம். அந்த டாக்டர்கள் எங்களுடைய அந்தஸ்தைத் தெரிந்துகொண்டு அதற்குத் தக்கபடி ஞானாம்பாளை ஒரு தனி அறையில் வைத்து இங்கிலீஷ் துரைசானிகளைக் கொண்டு சகல பக்குவங்களுஞ் செய்வித்தார்கள். அது தொத்து வியாதியானதால் நாங்கள் அடிக்கடி போய் ஞானாம்பாளைப் பார்க்கிறதற்கு வைத்தியர்கள் இடங்கொடுக்க வில்லை. அதனால் எங்களுக்கு உண்டான சஞ்சலம் கொஞ்சம் அல்ல.