பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடும்பத்தினர்‌ துயரம்‌

361

லாரும் “பூவையர்க்கரசி போய் விட்டாளே!” என்று புலம்பினார்கள். பாவலர்கள் எல்லாரும் “எங்கள் பாக்கியம் போய்விட்டதே!” என்று பதறினார்கள். உதயாஸ்தமன சமயங்களில் சூரியன் சிவந்த வர்ணமாயிருப்பதைப் பார்த்தால், ஞானாம்பாளுக்காகச் சூரியன் அழுது, அழுது, கண்ணும் முகமுஞ் சிவந்து போனதாகத் தோன்றிற்று. வானத்தில் நின்று விழுகிற பனி நீரினால் வானமும் அழுவதாகத் தோன்றிற்று. மலையருவிகளை பார்க்கும் போது மலையும் அழுவதாக விளங்கிற்று. சமுத்திரமும் அழுவது போல் சப்தித்துக் கொண்டிருந்தது. என்னுடைய துயர மிகுதியினால் சகல ஜீவகோடிகளும் ஸ்தாவர ஜங்கமங்களும் அழுவது போலவே காணப்பட்டன.

என் தாயார் எனக்குப் பல சமயங்களில் ஆறுதல் சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்கள் வாயைத் திறக்கும் போதெல்லாம், அழுகையுந் துக்கமும் அடைத்துக் கொண்டு, அவர்களைப் பேச ஒட்டாமல் செய்துவிட்டது. கடைசியாக அவர்கள் மனதைத் தேற்றிக் கொண்டு சொல்லுகிறார்கள்:- “மகனே! கடந்துபோன காரியத்தை நினைத்து அநுதாபப்பட்டு லாபம் என்ன? நாம் எவ்வளவுதான் அழுதாலும் ஞானாம்பாள் வரப் போகிறாளா? உலகத்தில் பிறக்கிறதும் இறக்கிறதும் சகஜமேயல்லாமல் நூதனமான காரியம் என்ன இருக்கிறது? நம்முடைய முன்னோர்கள் எல்லாரும் இறந்து போனார்களே! நாமும் ஒரு நாள் இறந்து போகவேண்டியவர்கள் தானே! நம்மை வீடு போ, போ என்கிறது. காடு வா வா என்கிறது.

காலம் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. அது ஓடும்பொழுது நம்முடைய ஆயுசையும் வாரிக்கொண்டு போகிறது. நாள், வாரம், மாசம், ஆண்டு என்று பல ரூபம் எடுத்துப்போவது நம்முடைய ஆயுசேயன்றி வேறென்ன? சிறியோர்களாயிருந்தாலும், பெரியோர்களாயிருந்தாலும், ஏழைகளாயிருந்தாலும், தனவான்களாயிருந்-