பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தரத் தண்ணி மகனைத்‌ தேற்றுதல்‌

363

இறந்து போனான்’ என்றான். பிறகு ‘உன் தகப்பன் எங்கே இறந்து போனான்?‘ என்று கேட்க, ‘தகப்பனும் கப்பலிலே மாண்டான்‘ என்று மாலுமி சொன்னான். உடனே அந்தச் சிநேகிதன் மாலுமியைப் பார்த்து ‘உன்னுடைய முன்னோர்கள் எல்லாரும் கப்பலிலே இறந்து போனதால், நீயும் கப்பலிலே ஜீவனம் செய்வதால் கப்பலிலே இறந்து போவாய்! ஆகையால் இந்த ஜீவனத்தை விட்டுவிடு‘ என்றான். மாலுமி சற்று நேரம் மௌனமாயிருந்து, பிறகு நேசனைப் பார்த்து ‘உன்னுடைய முப்பாட்டன் எங்கே இறந்தான்?‘ என்றான். சிநேகிதன் ‘என்னுடைய முப்பாட்டன் சமுத்திரத்திலே இறக்கவில்லை. மற்றவர்களைப் போலப் பூமியிலே இறந்தான்‘ என்றான். ‘உன் பாட்டனுந் தகப்பனும் எங்கே இறந்தார்கள்?‘ என்று மாலுமி கேட்க ‘அவர்களும் பூமியில் இறந்தார்கள்‘ என்று சிநேகிதன் மறுமொழி சொன்னான். உடனே மாலுமி அவனைப் பார்த்து ‘உன்னுடைய முப்பாட்டனும், பாட்டனும், தகப்பனும் பூமியில் இறந்துபோனதால், நீ பூமியில் இருப்பது சரியல்ல‘ என்றான். அந்த மாலுமி சொன்னது போல பூமியில் எங்கே இருந்தாலும் சாவது நிச்சயந் தானே. ஒருவன் தன்னுடைய அன்பனைப் பார்த்து ‘உலகத்தில் ஜீவித்திருப்பதும் இறந்து போவதும் இரண்டும் எனக்குச் சமானந்தான்‘ என்றான். அப்படியானால் ‘இறந்து போ‘ என்று சிநேகிதன் சொல்ல ‘இரண்டும் சமானமானதால்‘ நான் ஜீவித்திருக்கிறேன்‘ என்றான். அவன் சொன்னது போல நாம் சாவையும் வாழ்வையும் சமானமாக நினைக்க வேண்டும்.

பிள்ளைகளுக்குக் கசப்பான மருந்துகளைக் கொடுத்து, அடித்துத் திருத்தி வளர்க்கிற அன்புள்ள தாய் தந்தையர் போலக் கடவுளும் நம்மைத் திருத்துவதற்காகவே, அநேக சமயங்களில் நமக்குத் துன்பங்களைக் கொடுக்கிறார். நித்தியமான பரலோக பாக்கியம் பெரிதே யன்றி, நீர்க் குமிழி போல் நிலைமை யில்லாத இந்த உலகத்தில், நாம் அநுபவிக்கிற சுகமும் சுகமல்ல; துன்பமும் துன்பம்