பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364

பிரதாப முதலியார் சரித்திரம்

அல்லவே! கடவுளை நாம் காணாதபடி நம்முடைய தேகமாகிய திரை மறைத்துக் கொண்டிருப்பதால், அந்தத் திரை எப்போது நீங்குமோவென்று புண்ணியவான்களெல்லாரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஞானாம்பாளுக்குத் தேகமாகிய திரை நீங்கிவிட்டதால், அவளுக்குக் கடவுளுடைய தரிசனமும் நித்திய பாக்கியமும் கிடைத்திருக்கு மெபதற்குச் சந்தேகம் இல்லை. அவள் நித்தியானந்தத்திற் பிரவேசித்திருப்பது நமக்குச் சம்மதமில்லாதது போல, நாம் அவளுக்காக அழுது பிரலாபிப்பது எவ்வளவும் சரியல்ல. ஞானாம்பாள் போல நாமும் சன்மார்க்கத்தை அனுசரிப்போமானால், நாமும் மோக்ஷ வீட்டிற் பிரவேசித்து, ஞானாம்பாளுடன் நித்திய காலமும் கூடி வாழலாமென்பது சத்தியமே”” என்றார்கள்.

எனக்கு என் தாயார் சொன்ன புத்திமதிகளெல்லாம் நீர் மேல் எழுத்துப் போலவும், கல்லின் மேல் விரைத்த விரை போலவும் பயன்படாமற் போய்விட்டன. எனக்கு ஹிதஞ் சொன்ன என் தாயாரே ஆறுதல் இல்லாமல் ஓயாத மனமடிவுள்ளவர்களா யிருப்பார்களானால் என்னுடைய நிலைமையும் நன் விவரிக்க வேண்டுமா? நாங்கள் கரை காணாத துக்கக் கடலில் அமிழ்ந்தி, கரை ஏறுவதற்கு வழியில்லாமற் கலங்கிப் பரிதவித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள் தேவராஜப் பிள்ளையும் கனகசபை முதலானவர்களும் எங்களுடைய வீட்டுக்குள்ளே வந்து நுழைந்தார்கள். ஞானாம்பாள் பிராண வியோகமானதைக் குறித்து சந்திரகிரியில் இருந்து நாங்கள் அவர்களுக்குக் கடிதம் அனுப்பினபடியால், அவர்கள் துக்கம் விசாரிக்க வந்திருப்பார்களென்று நினைத்து, தேவராஜப் பிள்ளையையுங் கனகசபையையும், நான் தனித்தனியே கட்டிக்கொண்டு அழுதேன். அவர்கள் என்னோடுகூட அழவுமில்லை. முகத்தில் துக்கக் குறி விளங்கவுமில்லை. அவர்கள் இரக்கமில்லாத மனுஷர்களென்று நினைத்து நான் முகத்தைச் சுளித்துக்கொண்டு அப்பாற் போய்