பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

மல், என் பாட்டியார் என்னைக் கீழே விட்டுவிட்டார்கள். நானும் அவர்கள் பற்கடிக்குத் தப்பிப் பிழைத்தேன்.

இவ்வளவு நடந்ததும் என் மாதாவுக்குத் தெரியாது. பிற்பாடு எவ்விதமாகவோ தெரிந்து கொண்டு, துயர முகத்தோடு வந்து என் பிதாவை நோக்கி, "ஏன் இவ்வளவு கூக்குரல்?" என்று வினாவ, "கல்வி விஷயத்தைப் பற்றி உன் பாலன் சொல்வதைக் கேள்" என்று என் பிதா ஆக்ஞாபித்தார். உடனே என் தாயார் என் முகத்தைப் பார்த்தாள். நான் முன் சொன்னபடி என் பாட்டியாரிடத்திலே கற்றுக் கொண்ட பாடத்தை என் தாயாருக்குச் சொன்னேன். அதைக் கேட்டவுடனே என் தாயாருக்கு முகம் மாறிவிட்டது. பிறகு சற்று நேரம் பொறுத்து, என் தாயார் என்னை நோக்கி, "என் கண்மணியே, நீ சொல்வது எவ்வளவுஞ் சரியல்ல. கல்வி என்கிற பிரசக்தியே இல்லாதவர்களான சாமானிய பாமர ஜனங்களைப் பார். அவர்களுடைய செய்கைகளுக்கும் மிருகங்களுடைய செய்கைகளுக்கும் என்ன பேதமிருக்கின்றது? கல்வியை உணராவிட்டால் கடவுளது யதார்த்த சொரூபத்தையும், அனந்த கல்யாண குணங்களையும், தர்மாதர்மங்களின் பேதங்களையும், ஞான சாஸ்திரங்களையும், பூகோளம், ககோளம், கணிதம் முதலிய சாஸ்திரங்களையும், இகபர சுகங்களை அடையத்தக்க மார்க்கங்களையும் நாம் எப்படி அறியக்கூடும்? நமக்கு முகக் கண்ணிருந்தும் சூரியப் பிரகாசம் இல்லாவிட்டால் என்ன பிரயோஜனம்? முகக் கண்ணுக்குக் கல்வியாகிய ஞானப்பிரகாசம் அவசியம் அல்லவா? சாணைக்கல்லில் தேய்க்கப்படாத நவரத்தினங்கள் பிரகாசிக்குமா? பிருதிவி ரூபமாயிருக்கிற பொன் வெள்ளி முதலான பஞ்ச லோகங்களை எடுத்துக் காய்ச்சித் திரட்டாவிட்டால் அவைகளுக்கு ஒளி உண்டாகுமா? வெட்டித் திருத்திச் சாகுபடி செய்கிற நிலம் மட்டும் பலன் கொடுக்குமேயல்லாது, சீர்த்திருத்தஞ் செய்யப்படாத நிலம் பலன் கொடுக்குமா?