பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விபற்றி இளைஞர்‌ கருத்து

5

தேன். என் மாதாவினுடைய அலட்டைப் பொறுக்க மாட்டாமல், என் தந்தையார் என்னை ஒரு நாள் தனியே அழைத்து, "உன் தாயார் உன்னைப் பள்ளிக் கூடத்தில் வைக்கவேண்டுமென்கிறாளே, நீ என்ன சொல்லுகிறாய்?" என்று கேட்டார். உடனே நான் தந்தையை நோக்கி, "ஐயா, நானும் படிக்க வேண்டுமா? எனக்கிருக்கிற சுய புத்தி போதாதா? ஏழைகள் ஜீவனஞ் செய்து பிழைக்க வேண்டியதற்காக அவர்களுக்குக் கல்வி அவசியந் தான்; நான் படிக்க வேண்டிய அகத்திய மென்ன? ஏதாவது வாசிக்க வேண்டி யிருந்தால் வாசிக்கவும், எழுத வேண்டியிருந்தால் எழுதவும், நமக்குக் காரியஸ்தர்கள் இல்லையா? கணக்கர்களில்லையா?" என்றேன். இது நான் சுயமாகச் சொன்னதல்ல; என் பாட்டியார் அடிக்கடி அந்த வார்த்தைகளைச் சொல்ல நான் கேள்விப்பட்டிருந்ததால் அந்தப் பிரகாரம் நான் பாடம் பண்ணிக் கொண்டு சொன்னேன். அந்த வார்த்தைகள் என் சொந்த வார்த்தைகளென்று என் பிதா எண்ணி, ஆனந்த சாகரத்தில் மூழ்கினார். இவ்வளவு சாதுரியமாய் நான் பேசின சமாச்சாரம் வீடு முழுவதும் பரவி, எங்கள் காரியஸ்தர்கள், கணக்கர்கள், பந்துக்கள், பணிவிடைக்காரர்கள் முதலான சகலரும் ஒவ்வொருவராய் வந்து, என்னுடைய சாமர்த்தியத்தைப் புகழ ஆரம்பித்தார்கள்.என்னுடைய பாட்டியாரும் தம்முடைய உபதேசம் என்பதை மறந்துவிட்டு, என்னைக் கட்டித் தூக்கிக்கொண்டு, "என் கண்ணே! பொன்னே! இவ்வளவு சாமர்த்தியமாய்ப் பேச யாருக்காவது வருமோ?" என்று சொல்லிக் கொண்டு, நான் சுவாசம் விடுவதற்கு இடமில்லாமல் வாயாலும் பல்லாலும் அநேக முத்தங்கள் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த ஒவ்வொரு முத்தமும் எனக்குப் பிராணாவஸ்தையாயிருந்தது. அப்போது அவ்விடத்திலே கட்டியிருந்த ஒரு கருங்குரங்கு, என் பாட்டியார் என்னை ஏதோ உபத்திரவஞ் செய்வதாக எண்ணிக் கொண்டு, அவர்கள் மேலே தாவி விழுந்து, அவர்களைக் கடிக்க ஆரம்பித்தது. அந்த வேதனை பொறுக்க மாட்டா-