பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

லும்படியாக என் பாட்டனார் அதிகாரஞ் செலுத்திவந்தார். ஒவ்வொரு நபாபும் அவருக்குப் பல சமயங்களில் கனகாபிஷேகஞ் செய்ததுந் தவிர, எண்ணிக்கையில்லாத கிராமங்களையும் பூமிகளையும் சர்வ மானியமாகக் கொடுத்தார்கள். என் பாட்டனார், விருத்தாப்பியம் மேலிட்டவுடனே, அவருடைய திரவியங்களை யெல்லாம் எடுத்துக் கொண்டு, சத்தியபுரியில் வந்து வசித்தார். அவர் காலஞ் சென்றபிறகு, அவருடைய ஸ்திதிகளெல்லாம் என் பிதாவுக்குக் கிடைத்தது. அவர் அநுபவித்து வந்தார். என் தகப்பனார் பெயர் கனகாசல முதலியார். என் தாயார் பெயர் சுந்தரத்தண்ணி. என்னுடைய பெயரைச் சொல்ல எனக்கே சங்கோசமாயிருக்கின்றது. ஏனென்றால் அந்த நாமத்துக்குத் தகுந்த குணம் என்னிடத்தில் இல்லை; மேலும் என்னுடைய பெயரை எழுதி நீட்டினால் காதவழி தூரம் நீளும்; இந்தப் புஸ்தகமும் அந்தப் பெயருக்கே சரியா யிருக்கும்; ஆகையால் என்னுடைய பெயரைச் சுருக்கி, "பிரதாப முதலி" என்று என்னை எல்லாரும் கூப்பிடுகிறது வழக்கம். என் தாய் தந்தைகளுக்கு நான் ஏக புத்திரனாதலால், என்னை மிகவும் அன்பு பாராட்டி அருமையாக வளர்த்தார்கள். என் தகப்பனாருடைய பிரியத்துக்கும் தாயாருடைய பிரியத்துக்கும் பேதம் என்ன வென்றால், என் தகப்பனார் நாளை வருவதை யோசியாமல், இன்றைக்கு நான் சந்தோஷமாயிருந்தாற் போதுமென்று, நான் என் இஷ்டப்பிரகாரம் கொட்டம் அடிக்கும்படி விட்டுவிடுவார். என் தாயார் எப்போதும் நான் க்ஷேமமாயிருக்க வேண்டுமென்கிற நோக்கத்துடன் என்னை நயமும் பயமுமாக நடத்தி வந்தார்.

எனக்கு அஞ்சாம் பருவம் ஆரம்பமானது முதல் வித்தை கற்பிக்க வேண்டுமென்று என் தாயார் சர்வப் பிரயத்தனம் செய்தும் பலிக்க வில்லை. எனக்கு வயது போதாது போதாது என்று என் தகப்பனார் காலஹரணம் செய்து வந்தபடியால், என்னை எட்டாம் வயது எட்டிப் பார்க்கிற வரையில், நான் சுத்த நிரக்ஷர குக்ஷியாயிருந்-