பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னோர்‌ வரலாறு

3

பரிகாசம் பண்ணினார்கள். என் பாட்டனார் வெட்கத்தினால் தலை குனிந்து கொண்டு வீட்டுக்குப் போனார்.

அதற்குச் சில தினங்களுக்குப் பிறகு, நபாபினிடத்திலிருந்து அநேக சேவகர்கள் உருவின கத்திகளுடனே வந்து என் பாட்டனாரைப் பிடித்துக் குற்றவாளிபோற் பின்கட்டு முறையாகக் கட்டி, நபாபு சமூகத்திற்குக் கொண்டு போனார்கள். அதற்குக் காரணந் தெரியாமையினாலே, என் பாட்டனார் சித்தங் கலங்கி "நான் ஒரு பாவத்தையும் அறியேனே" என்று அழுதுகொண்டு போனார். எங்கள் பந்துக்களும், அவரைத் தொடர்ந்து, பரிதபித்துக் கொண்டு போனார்கள். அப்பொழுது சிங்காதனத்தின் மீது வீற்றிருந்த நபாபு என் பாட்டனாரைக் கண்டவுடனே எழுந்து, ஓடிவந்து என் பாட்டனாரைத் தழுவிக் கொண்டு சொல்கிறார். "நான் பக்கிரி போல மாறுவேஷம் போட்டுக் கொண்டு பல ஊர்களைச் சுற்றிப் பார்த்து வருகையில், சத்தியபுரியில் எனக்கு நேரிட்ட பிராணாபத்தைத் தீர்த்து இரக்ஷித்தீரே, அந்த உபகாரத்துக்காகவும், உம்முடைய அபார யோக்கியதைக்காகவும் உம்மைத் திவான் உத்தியோகத்தில் நியமித்திருக்கிறோம்; உமக்குச் சம்மதா?" என்று கேட்டார். உடனே என் பாட்டனார் "இம்மைப் பலன் வேண்டாமென்று முன்னே நான் சொல்லிப் பட்ட பாடு என் ஞாபகத்திலிருக்கிறது. அதை நான் மறந்தாலும் என் கன்னம் மறவாது; ஆகையால் உங்கள் சித்தப்படி நடக்கக் காத்திருக்கிறேன்" என்றார். அதைக் கேட்டவுடனே நபாபு சிரித்துக் கொண்டு, "நீர் ஆக்ஷேபிக்காமலிருக்கும் பொருட்டு உம்மைப் பலவந்தமாகக் கொண்டு வரும்படி ஆக்ஞாபித்தோம்" என்று சொல்லி உடனே என் பாட்டனாரைத் திவான் உத்தியோகத்தில் நியமித்துச் சன்னதுங் கொடுத்தார்.

இப்படிப்பட்ட திவான்கள் முன்னும் இல்லை பின்னும் இல்லை என்று ஜகப்பிரக்கியாதியாய் யாவருஞ் சொல்-