பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

வந்தபடியால், என் படிப்பைக் கவனிக்க என் தாயாருக்கு ஒரு நிமிஷமாவது ஒழிகிறதில்லை. ஆகையால் என் பாட்டியாரும் தகப்பனாரும் என் கல்வி விஷயத்தில் கவனம் வைக்கத் தலைப்பட்டார்கள். அது எனக்கு அநர்த்தமாய் முடிந்தது. எனக்குப் படிக்க இஷ்டமானபோது நான் படிக்கிறதென்றும், என்னை உபாத்தியாயர் கண்டனை தண்டனை செய்யக் கூடாதென்றும், ஆனால் நான் படிப்பில் சுக்கில பட்சத்துச் சந்திரன் போல், தினே தினே விருத்தி ஆகவேண்டுமென்றும் நிபந்தனை செய்தார்கள். இந்த நிபந்தனைகளின் பிரகாரம், சரியாய் நடக்க வில்லை யென்றும் சில உபாத்தியாயர்கள் நீக்கப் பட்டார்கள். என்னை மரியாதையாக அழையாமல் "வா, போ" என்று ஏகவசனமாகக் கூப்பிட்டதற்காகச் சில போதகர்கள் தள்ளப் பட்டார்கள். ஒரு உபாத்தியாயர் மாச முழுவதும் பிரசாயப் பட்டுச் சொல்லிக் கொடுத்துச் சம்பளம் வாங்குகிற சமயத்தில், சம்பளமில்லாமல் நீக்கப் பட்டார். உபாத்தியாயர்களைத் தள்ளுகிற அதிகாரம், என் தகப்பனாருக்கும் பாட்டியாருக்கும் இருந்தது போலவே நானும் அந்த அதிகாரத்தைச் சில சமயங்களில் செலுத்தி வந்தேன். இவ்வகையாக நான் பன்னிரண்டு உயிர் எழுத்துங் கற்றுக்கொள்வதற்கு முன் தள்ளுபடியான ஆசிரியர்களும் பன்னிரண்டு பேருக்கு அதிகமாயிருக்கலாம். இவ்வளவு ஆபத்துக்கும் தப்பி ஒரு உபாத்தியாயர் மட்டும் நிலைத்திருந்தார். அவர் குடும்ப சகிதமாய் எங்கள் வீட்டில் இருந்து கொண்டு எனக்கும் அவருடைய பிள்ளை கனகசபை என்பவனுக்கும் பாடம் சொல்லிக் கொண்டு வந்தார். ஒரு நாள் என் பாட்டியார் உபாத்தியாயரைப் பார்த்து, "நம்முடைய பிள்ளையாண்டான் படித்துப் படித்துத் தொண்டை வறண்டு போகிறதே! இனி மேல் உம்முடைய மகன் கனகசபை பாடம் படிக்கட்டும். அவன் படிக்கிறதைக் கேட்டு என் பேரன் கல்வி கற்றுக் கொள்ளட்டும். பிற்பாடு என் பேராண்டிக்குப் பாடம் தெரியாவிட்டால், அவனுக்குப்