பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விப்‌ பயிற்‌சி ஆரம்பம்‌

9

பயம் உண்டாவதற்காகக் கனகசபையைப் பலமாக அடியும்" என்றார்கள். உபாத்தியாயருடைய வயிற்றுக் கொடுமையினால் இந்த அநியாயமான நிபந்தனைக்கும் சம்மதித்தார். எனக்குப் பாடம் தெரியாத போதெல்லாம், உபத்தியாயர் கனகசபையை அடிப்பார். அவன் இல்லாதபோது உபாத்தியார் தன் முதுகிலும் அடித்துக் கொள்வார், நான் பாடத்தைச் சரியாய்ப் பாடித்த நேரமுமில்லை; கனக சபை அடிபடாத நேரமுமில்லை. ஒரு நாள் உபாத்தியாயர் கனகசபையை முதுகில் அடித்தபோது அவன் அழுதுகொண்டு "ஐயா! என் முதுகு ஒரு அபராதமும் செய்ய வில்லையே, இவ்வளவு பாடும் வயிற்றுப் பிழைப்புக்காகத் தானே! ஆகையால் வயிற்றில் அடியுங்கள்" என்றான். அதைக் கேட்டவுடனே எனக்கு இரக்கம் உண்டாகி, என் கண்ணில் ஜலம் ததும்ப ஆரம்பித்தது. நான் ஒரு அட்சரம் கற்றுக் கொள்வதற்குக் கனகசபை அநேகம் அடிபடுவான். இப்படியானால் தமிழ் நெடுங்கணக்கு முழுவதும் எனக்குப் பாடம் ஆவதற்கு முன் அவன் எத்தனை அடிபட்டிருப்பானென்று புத்திமான்கள் கணக்கிட்டுத் தெரிந்துகொள்ளப் பிரார்த்திக்கிறேன். அவன் உயிருக்கும் உடலுக்கும் அபாயம் வரும்படியாக அவனுக்கு அடி வாங்கிக் கொடுத்த அட்சரங்களுக்கு உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என்று பெயர் வந்தது கிரமமல்லவா?



2ஆம் அதிகாரம்
பால லீலை

நான் படிப்பு விஷயத்தில் மந்தமாயிருந்தாலும், விளையாடுகிற விஷயத்தில் அதிக முயற்சி உள்ளவனாக இருந்தேன். என்னுடைய பால்ய சேஷ்டைகள் யாவருக்கும் வியப்பாயிருக்குமானதால் அவைகளை அடியில் விவரிக்கிறேன்.