பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

என் வீட்டில் என்னைத் தவிர, மற்றவர்கள் எல்லாரும் சுரத்தினாலும் அம்மையினாலும் உபாதை பட்டார்கள். அவர்களைப் பல பேர் வந்து விசாரிக்கிறதும் உபசாரம் செய்கிறதுமா யிருந்தார்கள். என்னை ஒருவரும் விசாரிக்காதபடியால் நான் ஒரு மூலையில் அழுதுகொண்டு இருந்தேன். எல்லாரும் ஓடிவந்து, "ஏன் அப்பா!`அழுகிறாய்" என்று கேட்டார்கள். "எனக்குச் சுரமாவது அம்மையாவது வரவில்லையே!" என்று தேம்பித் தேம்பி அழுதேன்.

நானும் சில பிள்ளைகளும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது, அவர்களில் ஒரு பையன் என்னைப் பார்த்து, "நான் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு ஒரு வித்தை செய்கிறேன்; நீ அந்த வித்தையை இரண்டு கண்ணையுந் திறந்துகொண்டு செய்வாயா?" என்று கேட்டான். அதற்கு நான், "நீ இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு செய்கிற வித்தையை, நான் கண்ணைத் திறந்துகொண்டு செய்யக் கூடாதா? அப்படி நான் செய்யாவிட்டால் உனக்கு நான் இவ்வளவு பந்தயம் கொடுப்பேன்" என்று ஒப்புக்கொண்டேன். உடனே அந்தப் பையன் நடுத் தெருவில் உட்கார்ந்து, இரண்டு கண்ணையும் மூடிக்கொண்டு மண்ணை அள்ளி அள்ளித் தன் கண்மேலே போட்டுக் கொண்டான். பிற்பாடு என்னைப் பார்த்து, "நீ இரண்டு கண்களையும் திறந்துகொண்டு இந்த வித்தையைச் செய்" என்று மண்ணை அள்ளி என் கையில் கொடுத்தான். நான் கண்ணை இழந்துபோவதைப் பார்க்கிலும் காசை இழப்பது நலமென்று நினைத்துப் பந்தயக் காசை அவனுக்குக் கொடுத்துவிட்டேன்.

எங்கள் வீட்டு மேல் மாடியில் அதிக விலை பெற்ற நிலைக் கண்ணாடிகள் மாட்டியிருந்தன. ஒரு கண்ணாடியில் நானும் சில பிள்ளைகளும் எங்களுடைய முக அழகைப் பார்த்தபோது எல்லாருடைய முகமும் அழகாயிருக்க, என் முகம் மட்டும் எனக்கே பார்க்கச் சகிக்காமல் விகாரமாயிருந்தது. அது கண்ணாடியினுடைய பிசகென்றெண்ணிக்