பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளமை விளையாட்டு

11

கையை ஓங்கிக்கொண்டு அந்தக் கண்ணாடியில் பலமாக ஒரு குத்து குத்தினேன். அந்தக் கண்ணாடி ஆயிரம் துண்டாக உடைந்து போயிற்று.

எந்த வேலையிலும் சோம்பலாக இருக்கக் கூடாதென்றும் தொட்ட காரியத்தை உடனே முடித்துவிட வேண்டுமே தவிர நாளைக்கென்று நிறுத்தி வைக்கக் கூடாதென்றும் என் தாயார் எனக்கு அடிக்கடி புத்தி சொல்லி வருவார்கள். நான் அந்தப் புத்தியை பக்ஷண விஷயங்களில் உபயோகப் படுத்தி, எத்தனை பக்ஷணங்கள் அகப்பட்டாலும், நாளைக்கென்று வையாமல் உடனே சாப்பிட்டு, மந்தப் பட்டு வைத்தியர்களுக்கு ஓயாது வேலை கொடுத்து வந்தேன்.

எல்லாரிடத்திலும் மரியாதையாய்ப் பேசவேண்டுமென்றும், யாராவது வந்தால் அவர்களுக்கு உடனே ஆசனம் கொடுத்து உபசாரம் செய்ய வேண்டுமென்றும் என் தாயார் எனக்கு அடிக்கடி சொல்லி வருவார்கள். நான் அந்தப்படி வண்ணான், அம்பட்டன், தோட்டிக்குக் கூட ஆசனம் கொடுத்து மரியாதை செய்யத் தலைப்பட்டேன்.

தினமும் பொழுது விடிந்தவுடனே, உபாத்தியாயர் வந்து படிக்கச் சொல்லித் தொந்தரவு செய்தபடியால், பொழுது விடியாமலிருப்பதற்கு, என்ன உபாயமென்று யோசித்துப் பார்த்தேன். கோழி கூவிப் பொழுது விடிகிறபடியால், கோழி கூவாவிட்டால் பொழுது விடியாதென்று நினைத்து, கோழி வளர்க்கவேண்டாமென்று அக்கம் பக்கம் வீட்டுக்காரர்களுக்கு உத்தரவு செய்தேன்.

ஒரு நாள், ஒரு பையனிடத்தில் நான் இரண்டு வராகன் கடன் வாங்கினதாகவும், அவன் என்னை அடித்ததாகவும் சொப்பனங் கண்டு விழித்துக்கொண்டு, அந்தப் பையனை மறுநாள் பார்த்தபோது, அந்தச் சொப்பனத்தை அவனுக்குத் தெரிவித்தேன். உடனே அவன் “அந்தக் கடனைக் கொடு" என்று என் மடியைப் பிடித்துக் கொண்டான். நான் அவனுடைய கன்னத்தில் பளீர் பளீர்