பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

என்று இரண்டு மூன்று அறைகள் கொடுத்தேன். அவன் "ஏன் அடிக்கிறாய்?" என்று கேட்டான். "இராத்திரி நீ என்னை சொப்பனத்தில் அடித்தபடியால் அதற்காக நான் இப்போது நான் உன்னை அடித்தேன்" என்றேன். அவன் "கடனுக்கும் அடிக்கும் சரியாய்ப் போய்விட்டது" என்று சொல்லிப் போய்விட்டான்.

ஒரு நாள், நான் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு துஷ்டன் அவனுடைய மாட்டை ஓங்கி ஓங்கி அடித்து ஓட்டிக் கொண்டு போனான். நான் "ஏன் அடிக்கிறாய்?" என்று கேட்டதற்கு அவன் "என் மாட்டை எப்படியாவது நான் உபயோகிக்கிறேன். உனக்கென்ன?" என்றான். நான் உடனே என் கையில் இருந்த கழியால் அவனை அடித்து, "என் கழியை நான் எப்படியாவது உபயோகிக்கிறேன். உனக்கென்ன?" என்று சொல்லிப் போய்விட்டேன்.

எங்கள் வீட்டில் ஒரு பெரியவருக்கு அசாத்திய ரோகம் நேரிட்டு, வைத்தியர்களும் கைவிட்டுவிட்டார்கள். எமன் வந்து உயிரைக் கொண்டு போகின்றதென்று நான் கேள்விப் பட்டிருந்த படியால், கதவை மூடி வைத்திருந்தால், எந்த வழியாய் வருவான் என்று நினைத்து, அந்தப் பெரியவர் படுத்திருந்த அறையின் கதவை மூடி, துவாரங்களை யெல்லாம் அடைத்துவிட்டேன். அப்படிச் செய்தும் அந்தத் துஷ்ட யமன், எந்த வழியாகவோ வந்து பிராணனைக் கொண்டுபோய்விட்டான்.

நான் ஒரு நாள், கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தபிறகு, முதுகின் அழகைப் பார்க்கும் பொருட்டு கண்ணாடியை எனக்குப் பின்புறத்தில் வைத்து, முதுகாலே பார்த்தேன். ஒன்றும் தெரியாமல் மயங்கினேன்.

என்னுடைய நேசன் ஒருவன், ஒரு புஸ்தகம் அனுப்ப வேண்டுமென்று எனக்குத் தபால் வழியாய்க் கடிதம் அனுப்பினான். நான் அந்தப் புஸ்தகத்தை அனுப்பவில்லை.