பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளமை விளையாட்டு

13

சில நாளைக்குப் பிறகு நான் அவனைக் கண்டபோது "புஸ்தகம் அனுப்பும்படி நீ எழுதிய கடிதம் என்னிடத்தில் வந்து சேரவில்லை" என்றேன். "கடிதம் வந்து சேராவிட்டால், நான் புஸ்தகம் வேண்டுமென்று எழுதிய சமாச்சாரம் உனக்கு எப்படித் தெரிந்தது?" என்று அவன் கேட்க, நான் ஆடு திருடிய கள்ளன் போல் விழித்தேன்.

ஒரு முக்கியமான சங்கதியைப் பற்றி, ஒரு சிநேகிதனுக்கு நான் கடிதம் எழுதி அதன் கடைசியில் "இந்தக் கடிதம் வந்து சேரா விட்டால், உடனே எனக்குத் தெரிவி" என்று எழுதினேன். கடிதம் போய்ச் சேராவிட்டால் என்ற அந்தக் கடைசி வாக்கியத்தால் என்ன பிரயோசனமென்பதை நான் கவனிக்கவில்லை.

ஒரு பிரசித்தமான பொய்யன் என்னிடத்தில் வந்து, தன்னுடைய ஆயுசு முழுமையும் தான் ஒரு நிசம் சொன்னதில்லை என்றான். "நீ ஒரு நிசம் சொல்லியிருக்கிறாய்" என்று நான் சொல்ல, அவன் "இல்லை, இல்லை" என்றான். "ஆயுசு முழுமையும் நிசம் சொன்னதில்லையென்று நீ சொல்வது நிசம் அல்லவா?" என்றேன். அவன் சரியென்று ஒப்புக் கொண்டு என்னைப் பார்த்து "நீ ஒரு பொய் சொல்ல வேண்டும்" என்றான். நான் உடனே "நீ, யோக்கியன்" என்றேன்.

ஒரு நாள் இராத்திரி, நான் தங்கக் காப்புகளும் கொலுசுகளும் போட்டுக்கொண்டு நித்திரை செய்தேன். ஒரு திருடன் எவ்விதமாகவோ உள்ளே நுழைந்து, எல்லாரும் தூங்குகிற சமயத்தில் என்னுடைய கைக் காப்பையும் கொலுசையுங் கழற்றிக்கொண்டு ஓடினான். நான் உடனே "திருடரே! திருடரே!! இன்னொரு கைக் காப்பையுங் கொலுசையும் மறந்துவிட்டீரே" என்று கூவினேன். அந்த அரவம் கேட்டு, எல்லாரும் விழித்துக் கொண்டார்கள். திருடனும் ஓடிப்போய்விட்டான்.