பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

என் பாட்டியாருக்கு, மூன்றாம் முறை சுரம் வந்து கொண்டிருந்தது. எங்கள் வீட்டிலிருந்த கடியாரம், மத்தியானம் இரண்டு மணி அடித்தவுடனே, சுரம் வருவது வழக்கமாயிருந்தபடியால், கடியாரம் ஓடாமல் நின்று விட்டால் சுரமும் வராமல் நின்றுபோகுமென்று நினைத்து கடியாரத்தை நிறுத்தி விட்டேன். அப்படிச் செய்தும் அந்தத் திருட்டுச் சுரம் வராமலிருக்கவில்லை.

நானும் கனகசபையும் பின்னும் சில பிள்ளைகளும் எங்களுக்குத் தேகபலம் உண்டாவதற்காகச் சில நாளாய்ச் சிலம்பம் பழகிக்கொண்டு வந்தோம். ஒரு நாள் இராத்திரி வெகுநேரம் வரையில், நாங்கள் சிலம்பம் விளையாடிக் கொண்டிருந்து வீட்டுக்கு வந்தபோது, எங்கள் வீட்டுக்கு எதிரேயிருக்கிற மைதானத்தில் கூத்தாடிகள் வேஷம் போட்டுக்கொண்டு, இராம நாடகம் ஆடிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் வந்தபோது இராமரும், சீதையும், லட்சுமணரும் நகரத்தை விட்டுப் புறப்பட்டுக் காட்டுக்குப் போகிற சமயமாயிருந்தது; அப்போது தசரதர், கௌசலை முதலான சகல ஜனங்களும், அழுது பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டவுடனே, நான் கனகசபையைப் பார்த்து, "அந்தப் பொல்லாத கைகேசியினாலே இராமர் பட்டத்தை இழந்து மனமுருகி வாடவும் சம்பவித்திருக்கின்றதே! இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருப்பது தர்மமா?" என்று கேட்க, அவன் "இந்த அக்கிரமத்தைத் தடுக்க முயற்சி செய்யாமல் நாம் சும்மா இருப்பது அழகல்ல" என்றான். நானும், அவனும் மற்றப் பிள்ளைகளும், எங்கள் கைகளிலிருந்த சிலம்பக் கழிகளுடனே சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜனங்களின் தலைமேல் ஏறி மிதித்துக் கொண்டு, நாடகசாலைக்குள்ளே பிரவேசித்து விட்டோம். அங்கே தன் பிள்ளைக்குப் பட்டாபிஷேகம் ஆகுமென்கிற அகக்களிப்புடன் உட்கார்ந்துகொண்டிருந்த