பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளமை விளையாட்டு

15

கைகேசியை வளைத்துக் கொண்டு, எங்கள் கை சலிக்கிற வரையில் அடித்தோம். அவள் "பரதனுக்குப் பட்டம் வேண்டாம், வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டு ஓட்டம் பிடித்தாள். அப்போது கூனி அகப்பட்டிருந்தால் அவளை எமலோகத்துக்கு அனுப்பியிருப்போம். அவளுடைய அதிர்ஷ்ட வசத்தால் அகப்படாமல் தப்பித்துக் கொண்டாள்; காட்டுக்குப் போகிற இராமரிடத்துக்குப் போய், நகரத்துக்குத் திரும்பும்படி சொன்னோம். அவர் "பிதுர் வாக்கிய பரிபாலனம் செய்வதற்காக நான் காட்டுக்குப் போவது அகத்தியம்" என்றார். நீர் போனால் காலை ஒடித்துவிடுவோமென்று வழி மறித்துக் கொண்டு அவருக்கு நியாயத்தை எடுத்துக் காட்டி மெய்ப்பித்தோம். எப்படி என்றால் "சும்மா இருந்த உம்மை உம்முடைய தகப்பனார் அழைத்து உம்மைப் பட்டங் கட்டிக்கொள்ளும்படி சொல்லி, நீரும் அதற்குச் சம்மதித்து ஊரெங்கும் முரசறைவித்த பிற்பாடு, உமக்குக் கொடுத்த இராச்சியத்தைப் பரதனுக்குக் கொடுக்க அவருக்கு அதிகாரம் உண்டா? அப்படி அவர் கொடுத்திருந்தால் அது அசத்தியமல்லவா? உமக்குப் பட்டாபிஷேகம் ஆனால் தான் உமது தந்தையாருடைய சத்தியம் நிலைக்கும்.

"என்னே அரசர் இயற்கை யிருந்தவா
தன்னே ரிலாத தலைமகற்குத் தாரணியை
முன்னே கொடுத்து முறைதிறம்பத் தம்பிக்குப்
பின்னே கொடுத்தாற் பிழையாதோ மெய்யென்பார்"

என்று கம்பரும் சொல்லியிருக்கிறபடியால், ஊருக்குத் திரும்பும்" என்றேன். இராமர் நான் சொன்ன வாய் நியாயத்தைப் பார்க்கிலும், தடியடி நியாயத்துக்குப் பயந்து உடனே நகரத்துக்குத் திரும்பினார். நான் வசிட்டர் முதலானவர்களை அழைத்து இராமருக்கு மகுடாபிஷேகம் செய்வித்தேன். இந்தப் பிரகாரம் இராமாயணம் சப்த காண்டத்தை ஒன்றரைக் காண்டத்துக்குள் அடக்கி, இராமரும் அவருடைய தம்பியும்