பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

சீதையும் வனத்துக்குப் போகாமலும், தசரதர் இறவாமலும், இராவணன் சீதையைச் சிறை எடுத்தானென்னும் அபவாதம் இல்லாமலும், இராவணாதிகளை ராமர் கொலை செய்தாரென்கிற பழிச் சொல் இல்லாமலும், சிறு பிள்ளையாகிய பரதன் ராஜ்ஜியபாரம் தாங்கி வருந்தாமலும் செய்து, பிரதாப முதலி என்னும் பேரை நிலை நிறுத்தினேன்.

ஒரு நாள் எங்கள் குடும்ப வைத்தியர் வீதியில் வருகிறதைக் கண்டு, அவர் கண்ணில் படாமல் நான் ஓடி ஒளிந்துகொண்டேன். கனகசபை "ஏன் ஒளிகிறீர்கள்?" என்று கேட்டான். "நமக்குச் சில நாளாய் வியாதி வரவில்லையே! வைத்தியருக்குக் கோபமாயிருக்குமென்று பயந்து ஒளிந்துகொண்டேன்" என்றேன். மறுபடி ஒரு நாள் அந்த வைத்தியர் என்னைக் கண்டு, "பூர்வீக மனுஷர்களெல்லாரும் தீர்க்காயுசாயிருந்தார்கள்; இந்தக் காலத்து மனுஷர்களுக்கு ஆயுசு குறைந்து போனதற்குக் காரணம் என்ன?" என்று கேட்டார். நான் அவரைப் பார்த்து "பூர்வீகத்தில் வைத்தியர்கள் இல்லாதபடியால் பூர்வீக மனுஷர்கள் நீடிய ஆயுசு உள்ளவர்களாயிருந்தார்கள்; இந்தக் காலத்தில் வைத்தியர்கள் அதிகமாயிருப்பதால் ஆயுசு குறைந்து போய்விட்டது" என்றேன்.

நானும் சில பிள்ளைகளும் நீந்தக் கற்றுக் கொள்வதற்காக ஒரு குளத்துக்குப் போனோம்; "நானும் நீந்தக் கற்றுக் கொள்வதற்கு முன் தண்ணீரில் இறங்கமாட்டேன்" என்று கரையில் உட்கார்ந்தேன். "தண்ணீரில் இறங்காமல் எப்படி நீந்தக் கற்றுக்கொள்கிறது?" என்று எல்லாரும் என்னைப் பரிகாசம் செய்தார்கள்.

நானும் சில பிள்ளைகளும் குதிரைப் பந்தயம் விட்டபோது என் குதிரை எல்லாருடைய குதிரைகளுக்கும் பிந்திப் போய்விட்டதால், எல்லாரும் என்னைப் பார்த்துக் கை கொட்டிச் சிரித்தார்கள். நான் "என்னுடைய குதிரை