பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளமை விளையாட்டு

17

எல்லாருடைய குதிரைகளையும் துரத்துகிறது” என்று சொல்லி அவர்களுக்கு மேல் அதிகமாகச் சிரித்தேன்.

ஒரு நாள் நானும் கனகசபையும் பின்னுஞ் சிலரும் எங்களுடைய வீரப் பிரதாபங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் கனகசபையை நோக்கி "அநேக சத்துருக்களை நான் ஓடும்படி செய்தேன்" என்றேன். அவன் "எப்படி ஓடச் செய்தீர்கள்?" என்று கேட்க, "நான் சத்துருக்களைக் கண்டவுடனே ஓட ஆரம்பித்தேன்; அவர்கள் என்னைத் துரத்திக்கொண்டு ஓடி வந்தார்கள்; இப்படி நான் சத்துருக்களை ஓடச் செய்தேன்" என்றேன். கனகசபை என்னுடைய சவுரியத்தை மெச்சிக்கொண்டு, "நீங்கள் சத்துருக்களை எப்படி வெல்லுவீர்கள்?" என்று கேட்க, "நான் சத்துருக்களைக் கண்டவுடனே அதிவேகமாக ஓடுவேன்! என்னுடைய ஓட்டத்தைப் பிடிக்க அவர்களாலும், அவர்கள் பாட்டனார்களாலும் முடியாது; இவ்வகையாக அவர்களை நான் வெற்றி கொள்வேன்" என்றேன். அப்போது கூட இருந்த ஒரு சிப்பாய், தான் சண்டையில் எதிரியினுடைய காலை வெட்டினதாக வீரம் பேசினான். நான் அவனைப் பார்த்து "எதிரியினுடைய தலையை வெட்டாமல் காலை வெட்டின காரணம் என்ன?" என்று கேட்க, அந்தச் சிப்பாய் "நான் என்ன செய்வேன்? எதிரியினுடைய தலையை வேறொருவன் முன்னமே வெட்டிக் கொண்டு போய்விட்டான்; பிறகு நான் காலை வெட்டினேன்" என்றான்.

சில காலத்துக்கு முன் நானும் கனகசபையும் சேர்ந்து சில கவிகள் உண்டு பண்ணினோம். அந்தக் கவிகளை இந்தக் கிரந்தத்திலே சேர்க்கலாமென்று யோசித்து, அவைகளைப் பார்வையிட்டோம். சில கவிகளின் அர்த்தம் எனக்கு மட்டும் தெரிகின்றது. கனகசபைக்குத் தெரியவில்லை. சில

2