பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனகசபை இல்லம் ஏகுதல்

43

எங்களைக் கூட அழைத்துக்கொண்டு போய்த் தகுந்த மரியாதைகள் செய்தனுப்ப வேண்டுமென்பது கனகசபையின் தகப்பனாருடைய அபேக்ஷையா யிருந்தாலும், நாங்கள் அதற்குச் சம்மதிக்கமாட்டோமென்று தெரிந்துகொண்டு, அவர் எங்களைப் பார்த்து "நீங்கள் ஒன்றிலும் குறைவில்லாத பாக்கியசாலியாயிருக்கிறீர்கள்!`நீங்கள் செய்த பேருபகாரத்திற்குக் கடவுள் கிருபை செய்யவேண்டுமே யல்லாமல், என்னாலே செய்யக் கூடியது யாதொன்றுமில்லை; உங்களுக்குப் பிரதி உபகாரம் செய்யவேண்டுமென்று நான் நினைத்தால், என்னைப் போல் நன்றி கெட்டவர்கள் வேறொருவரும் இருக்க மாட்டார்கள்; ஏனென்றால், உங்களுக்கு, ஒரு துன்பம் வந்த காலத்தில் அல்லவே நான் உங்களுக்குச் சகாயம் செய்யவேண்டும்; ஆகையால், உங்களுக்குப் பிரதி உபகாரஞ் செய்ய நினைப்பது, உங்களுக்குத் துன்பம் வரவேண்டுமென்று பிரார்த்திப்பது போலாகுமானதால், நான் பிரதி உபகாரஞ் செய்ய நினைக்கமாட்டேன்" என்றார். அவர் பயணப்படுமுன்னுக்கு எங்கள் பாட்டியார் வந்து, "ஐயா! உங்கள் பிள்ளை என்னால் வெகுவாக அடிபட்டான்! அதை நினைக்கும்போது எனக்கு வருத்தமாயிருக்கிறது" என்றார்கள். உடனே அவர் என் பாட்டியாரை நோக்கி "அவன் அடிபட்டது அவனுக்குப் பெரிய அநுகூலம். துன்பமே ஞானத்தின் பாடசாலை; துன்பப்படாதவன் ராஜாங்கத்துக்கு யோக்கியனாக மாட்டான். தான் அடிபடாதவனா யிருந்தால், அடியினால் உண்டாகிற உபத்திரவம் இன்னதென்று தெரியாமல் தன்னுடைய பிரஜைகளை அடிக்கடி அடிக்கச் சொல்லுவான்; துன்பப்படாதவனுக்கு ஏழைகளுடைய வருத்தம் எப்படித் தெரியும்?" என்றார். அப்போது தான் அடியினால் உண்டாகிற பிரயோஜனம் இன்னதென்று எனக்குத் தெரிந்தது. பிற்பாடு அவரும் அவருடைய பத்தினியாரும் கனகசபையும் அவனை வளர்த்த தந்தை தாய்மார்களையும் அழைத்துக் கொண்டு எங்களிடத்தில் தனித் தனியே விடைபெற்றுக்கொண்டு,