பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


முதற்பதிப்பின் முகவுரை

ரு நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவை என்று அறிஞர்கள் கருதுவனவற்றுள் அந்நாட்டின் சரித்திர நூல் சிறந்ததொன்றாம். முன்னோர் ஒழுகிக் காட்டிய உயர்ந்த நெறிகளையும் அன்னோர் கொண்டிருந்த சிறந்த பண்பினையும் பின்னோர்க்கு நினைப்பூட்டி, அவர்களை நல்வழிப்படுத்துவன நாட்டின் பழைய சரிதங்களே எனலாம். அதுபற்றியே, உலகில் நாகரிகம் பெற்ற நாட்டினர், தம் நாட்டின் உண்மை வரலாறுகளை ஆராய்ந்து அவற்றை மக்கள் எளிதில் அறிந்துகொள்ளுமாறு பல பல நூல்களை வெளியிட்டு வருகின்றனர். மேனாடுகளைப் பார்ப்போமாயின் அங்கே ஆண்டுதோறும் எத்தனையோ வகையில் சரித்திர நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றை மக்கள் ஆர்வத்தோடு படித்து, உணர்ச்சியும் ஊக்கமும் எய்தி முன்னேற்றத் திற்குரிய வழியிற் செல்லுகின்றனர். மேனாட்டு மக்கள் அத்துணை நலங்களையடைந்து சிறப்புறுவதற்குக் கார ணம், அந்நாட்டின் சரித்திரங்கள் அன்னோர் படித் துணர்ந்து கொள்ளுமாறு அவர்களது தாய்மொழியில் வெளியிடப்பெற்றிருப்பதேயாம். ஆகவே, ஒரு நாட்டின் சரித்திரம் அந்நாட்டு மக்களது தாய்மொழியில் எழுதி வெளியிடப்பெற்றால் அஃது அன்னோரது அறிவு வளர்ச்சிக் கும் முன்னேற்றத்திற்கும் உதவிபுரியும் என்பது தேற்றம்.

நம் தமிழ் நாடு, பிறமொழியாளரான ஏதிலார் ஆட்சிக்குட்பட்டுத் தன் பெருமையை இழப்பதற்குமுன், சேர, சோழ, பாண்டியர் என்னுந் தமிழ் வேந்தர்களால் அரசாளப்பெற்று ஒப்புயர்வற்ற நிலையில் விளங்கியது என்பது பண்டைத் தமிழ் நூல்களால் நன்கறியக்கிடக்கின்றது. அவ்வரசர்களின் வரலாற்றை நாம் அறிந்து கொள்ளுமாறு நம் தமிழ் மொழியில் எத்தனைச் சரித்திர நூல்கள் எழுதப்பெற்றுள்ளன என்று பார்ப்போமானால் அவை விரல் விட்டெண்ணக்கூடிய நிலையில்