பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

பிற்காலச் சோழர் சரித்திரம்

கரசு அடிகள், சோழநாட்டில் பழையாறை வடதளியில் இறைவனை வணங்குவதற்குச் சென்றபோது அக்கோயி லில் சிவலிங்கப் பெருமானை அமண் சமயத்தினர் மறைத்து வைக்கவே, அடிகள் உள்ளம் வருந்தினாராக, அதனை யுணர்ந்த அவ்வூரிலிருந்த வேந்தன், அடிகளது இன்னலைப்போக்கி வடதளிப்பெருமானை வழிபடச்செய்து சிறந்த விமானம் ஒன்றும் எடுப்பித்து, நாள் வழி பாட்டிற்கு நிவந்தங்களும் அளித்தனன் என்று திருத் தொண்டர் புராணமாகிய பெரிய புராணம் கூறுகின்றது . இதில் குறிப்பிடப்பெற்ற அரசன், அடிகள் காலமாகிய கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழ நாட்டில் பழையாறை' என்னும் தொன்னகரில் தங்கி வாழ்ந்து கொண்டிருந்த சோழர் மரபினனாகிய ஒரு குறு நில மன் னன் என்பதில் ஐயமில்லை. அந்நகரம் மிகப் பழமை வாய்ந்ததொன்று. அந்நகரில் பண்டைச் சோழரது அரண் மனையிருந்த இடம் இக்காலத்தில் சோழமாளிகை என்ற பெயருடன் ஒரு தனி ஊராக உளது. அதனைச் சுற்றி நாற்புறத்திலும் ஆரியப்படை வீடு, பம்பைப்படை வீடு, புதுப்படை வீடு, மணப்படை வீடு என்ற நான்கு பெரும் படைவீடுகள் அக்காலத்தில் சோழ மன்னர்களால் அமைக்கப்பட்டிருந்தன. அவை நான்கும் இந்நாளில் தனித்தனி ஊர்களாக உள்ளன. பிற்காலத்தில் ஆட்சி புரிந்த விசயாலய சோழன் வழியினரும் அப்பழையாறை நகரைத் தமக்குரிய இரண்டாவது தலை நகராகக்கொண்டது அதன் தொன்மைத் தொடர்பு நோக்கியேயாம். இரண் டாம் பராந்தகன், கங்கைகொண்ட சோழன் முதலானோர் அம்மா நகரில் பல நாட்கள் தங்கியிருந்தமையும் அறியத் தக்கது. கி. பி. பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில்


1. பெரிய புராணம், திருநாவுக்கரசு நாயனார் புராணம் - பாடல்க ள், 294-299. பழையாறை நகர் இந்நாளில் ஒரு சிற்றூராகக் கும்ப கோணத்திற்குத் தென்மேற்கே உளது. அது முற்காலத் தில் 5 மைல் நீளமும் 2 மைல் அகலமுமுள்ள பெரு நகரா யிருந்தது.