பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

பேத்திகளும் கொள்ளு வகையருக்களுமாகப் பெருகி, ஆலமரமாக வளர்ந்து, சாந்தி நிவாஸம் முழுவதும் வியாபித்து, உற்றாரும் சுற்றத்தாருமாக, வெளியூர்களிலும் வேர்விட்டிருந்தார்கள்.

சுமார் அறுபத்து மூன்றாவது வயதை எட்டிப் பிடித்துக்கொண்டிருக்கும் ஆஜானுபாகுவான புருஷோத்தமன், சாய்வு நாற்காலியில் சாய்ந்தவண்ணம் எதிர்த்தாற்போல் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் 'சன்ன' தையே பார்த்துக்கொண்டிருந்தார். அது, ஸ்ரீமான் புருஷோத்தமனின் ராஜவிசுவாசத்தை மெச்சிப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அளித்த விருது. அதன் பிறகு அவருக்கு, ‘சர்’ பட்டமும் கிடைத்தது. அவரைப் போலவே, லேடி புருஷோத்தமனும் மிக்க இளகிய மனம் படைத்தவர். அன்புச் சங்கிலியால், குடும்பத்தின் உறவைப் பிணைத்துக் காப்பாற்றி வருபவர்.

அவர் பெரிய உத்தியோகங்களுக்கெல்லாம் மத்தியில் முதலாவது உலக மகாயுத்தத்திலும் பங்கு கொண்டு பணியாற்றினார். பிறகு, நாட்டில் சுதந்தர தாகம் பெருக்கெடுத்தோடிய காலத்தில் பட்டம் பதவிகளையெல்லாம் துறந்துவிட்டு நேதாஜியின் இந்திய தேசீய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டுமென்று சிங்கப்பூருக்குப் புறப்பட்டார். ஆனால், அப்போது லேடி புருஷோத்தமன் தான் பெருகிநிற்கும் குடும்பப் பட்டாளத்தைக் காட்டிப் பயமுறுத்தி, கெஞ்சிக் கூத்தாடித் தடுத்து நிறுத்திவிட்டாள்.

இதில் புருஷோத்தமனுக்குப் பெரும் குறை.

'அந்தப் பெரும் குறையைத் தீர்க்கத் தம் குடும்பத்திலிருந்து யாராவது தேச சேவைக்குத் தயாராயிருப்பார்களா, அல்லது உருவாவார்களா? என்பதே அவரது அடங்காக ஆவலாக இருந்தது. அந்த மாதிரி, தம்