பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

பொழுது விடிவதற்குள்ளாகப் பாவாடை எத்தனை விதவிதமான மிட்டாய்களைச் சிருஷ்டித் துவிட்டான்! கண்னைப் பறிக்கும் வண்ணத்தைப் புகழ்வதா கருத்தைக் கவரும் கைத்திறனைப் புகழ்வதா? மாரியம்மாள் மனத்திற்குள் பூரித்துப் போனள். எந்தச் சீமான் வீட்டுக் குழந்தைகளாய்த்தான் இருக்கட்டுமே, இவைகளைப் பார்த்தால் வாங்கித் தின்ன வேண்டுமென்று ஆசை பிறக்காமலா போய்விடும்?

உரித்த வெங்காயமும், மனைவி பிசைந்து போட்ட சோறும் பாவாடைக்கு-அவன் செய்து குவித்திருக்கும் மிட்டாய்களை விட ருசித்தன.

மூவர்ணக் கலரில் சொப்புச் சொப்பாகச் செய்து தள்ளியிருக்கும் மிட்டாய்களையெல்லாம், தலையில் சுமந்து செல்லும் வியாபாரத் தட்டில் ஒழுங்காக அடுக்கி வைத்திருந்தான். பார்க்க அவனுக்கே, மலைப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

ஆமாம்! அந்த ஊரில் மிட்டாய் வியாபாரத்தில் போட்டி இட்டு, பாவாடையை யாரும் மிஞ்சிவிட முடியாது. அதுவும் அன்று சுதந்தரத் தினமல்லவா? ஒரு கணிசமான தொகையை அவன் மனம் புள்ளி போட்டபடி இருந்தது.

இந்தச் சமயத்தில் திடீரென்று, மிட்டாய்த் தட்டு வைத்திருந்த அறையிலிருந்து 'நாயினா!’ என்ற கடைக் குட்டிப் பயலின் குரலைக் கேட்கவுமே, பாவாடை திடுக்கிட்டுத் திரும்பினான்.

அப்பொழுதுதான் எழுந்திருந்த சின்னப் பயல், தட்டிலிருந்த மிட்டாய் ஒன்றைக் கையிலெடுத்துச் சுவைத்த வண்ணம் நின்றுகொண்டிருந்தான்.

அவ்வளவுதான்! ஆவேசத்தோடு கையை உதறிவிட்டுப் பாதிச் சாப்பாட்டிலேயே எழுந்திருந்துவிட்டான் பாவாடை .