பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

155




பேதை மடவன்னந் தன்னைப் பிழையாமல்
மேதிக் குலமேறி மென்கரும்பைக்-கோதிக்
கடித்துத்தான் முத்துமிழும் கங்கைநீர் நாடன்
பிடித்துத்தா என்றான் பெயர்ந்து 31


நாடிமட வன்னத்தை நல்ல மயிற்குழாம்
ஓடி வளைக்கின்ற தொப்பவே-நீடியநற்
பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக் கொடுபோந்து
தங்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து 32


அன்னந்தனைப்பிடித்தங் காயிழையார் கொண்டுபோய்
மன்னன் திருமுன்னர் வைத்தலுமே-அன்னம்
மலங்கிற்றே தன்னுடைய வான்கிளையைத் தேடிக்
கலங்கிற்றே மன்னவனைக் கண்டு 33

உரையாடல்கள்

அஞ்சல் மடவனமே உன்றன் அணிநடையும்
வஞ்சி யனையார் மணிநடையும் - விஞ்சியது
காணப் பிடித்ததுகாண் என்றான் களிவண்டு
மாணப் பிடித்ததார் மன் 34


செய்ய கமலத் திருவை நிகரான
தையல் பிடித்த தனியன்னம்-வெய்ய
அடுமாற்றம் இல்லா அரசன்சொல் கேட்டுத்
தடுமாற்றம் தீர்ந்ததே தான் 35


திசைமுகந்த வெண்கவிகைத் தேர்வேந்தே! உன்றன்
இசைமுகந்த தோளுக்கு இசைவாள்-வசையில்
தமையந்தி என்றோதும் தையலாள் மென்றோள்
அமையந்தி என்றோர் அணங்கு 36


அன்னம் மொழிந்த மொழிபுகா முன்புக்குக்
கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச்-சொன்னமயில்
ஆர்மடந்தை என்றான் அனங்கன் சிலைவளைப்பப்
பார்மடந்தை கோமான் பதைத்து 37