பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்126

சித்திரிக்கப்பட்டுள்ளன. அவை சாண்டியாகோ, டெமுகாவைச் சேர்ந்த இரண்டு பெண்களை நோக்கி எழுதப்பட்டவை. அப்பெண்கள் இயற்கையோடு தொடர்பு படுத்தப்பட்டு, நிலமாகவும், மூடுபனியாகவும் உருவகப் படுத்தப்படுகின்றனர். தம்மை ஒரு கேட்போனாகவும் (interrogator) ஆய்வாளனாகவும் (explorer) நெருடா அக்கவிதைகளில் காட்டிக் கொள்கிறார். கருத்துக்களும் மூடுமந்திரமாக அமைந்துள்ளன:

தெற்கு விண்மீன்களுக்கு நடுவில்
உன் பெயரைப்
புகை எழுத்தில் எழுதியவர் யார்?
நீ பிறப்பதற்கு முன்
எப்படி இருந்தாயோ
அப்படி நினைவு படுத்திக் கொள்ள
என்னை அனுமதி.

[ஒவ்வொரு நாளும் விளையாடுகிறாய்]

1924-லிருந்து 1934 வரை அவருடைய வாழ்க்கை ஒரே அலைக்கழிப்பாக இருந்தது. 1927-இல் பர்மாவிலும், 1928-இல் இலங்கையிலும், 1930-இல் ஜாவாடடேவியாவிலும், 1931-இல் சிங்கப்பூரிலும், 1933-இல் அர்ஜெண்டைனாவிலும் சிலிநாட்டுத் தூதுவராக (Consul)ப்பணி புரிந்தார். ஐந்தாண்டுகள் கிழக்காசிய நாடுகளில் வாழ்ந்தபோது தனிமை அவரை மிகவும் வருத்தியது. தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியை யாரிடமும் பேச வாய்ப்பில்லாமல் தவித்தார். தூதரக வருமானம் தம்மைக் கெளரவமாகக் காட்டிக் கொள்ளப் போதியதாக இல்லை. அதனால் சில அவமதிப்புக்களுக்கும் ஆளாக வேண்டியிருந்தது. தாம் அப்போதிருந்த நிலையை விளக்கி ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ‘தெருநாய்களின் துணையோடு வாழ்ந்தேன்’ என்று வருந்தி எழுதியிருக்கிறார். வியட்நாம் காடுகளில் சுற்றியலைந்ததைப்பற்றித் தமது பிற்காலக்கவிதை யொன்றில்[1] குறிப்பிடும் போது “என் வயதில் இருபதாண்டுகள் கூடிவிட்டன; சாவை எதிர் நோக்கிக் காத்திருந்தேன்; என் மொழிக்குள் நான் சுருங்கிக் கொண்டேன்” என்று எழுதுகிறார்.

நெருடா பர்மாவில் பணியாற்றிய போது, அழகிய ஒரு பர்மியப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது; கொஞ்சநாள் அவளோடு வாழ்க்கை நடத்தினார். பிறகு அவள் உறவு சலித்து, சொல்லிக் கொள்ளாமல் அவளை விட்டுப் பிரிந்து இலங்கைக்குச் சென்றுவிட்டார்.

இலங்கையில் தூதராக இருந்தபோது, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். நேருவைக் கண்டு பேசவிரும்பி டில்லி சென்றார். நேரு முதலில் பேட்டி கொடுக்க மறுத்து

  1. The watersong Ends