பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1270முருகு சுந்தரம்



விட்டார். இரண்டாம் முறை நேருவைக் கண்டு பேசினார். ஆனால் நேரு அவரைக் கவர முடியவில்லை. தமது தன் வரலாற்று நூலில் நேருவைப் பற்றி நல்ல அபிப்பிராயத்தையும் அவர் சொல்லவில்லை. இந்திய நாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது கூட,

அழகிய நிர்வாணப் புத்தர்கள்
மதுவிருந்தைப் பார்த்த வண்ணம்
திறந்த வெளியில்
வெறுமையாகச்
சிரித்துக் கொண்டிருக்கின்றனர்

(கிழக்கில் சமயம்)

என்று கசப்புணர்ச்சியோடு எழுதுகிறார்.

1983-இல் அர்ஜெண்டைனாவில் தூதராக இருந்தபோது ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கவிஞரான லார்காவை போனஸ் அயர்லில் சந்தித்து நெருங்கிய நண்பரானார். அச்சந்திப்பைப்பற்றியும், அச்சந்திப்பின் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளைப்பற்றியும் கவிதை நடையில் நெருடா தன் வரலாற்று நூலில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:

"போனஸ் அயர்ஸ் நகரத்தில் நடாலியா பொடானா (Natalio Botana) என்ற ஒரு பத்திராதிபர் இருந்தார். அவர் பெரிய கோடீசுவரர் ஒரு நாள் மாலை நானும் ஸ்பெயின் நாட்டுப் பெருங்கவிஞர் லார்காவும் அவருடைய மாளிகைக்கு விருத்துக்கு அழைக்கப்பட்டிருந்தோம். நடாலியா பொடானா பெரும்புரட்சிக்காரர்; சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர். ஓர் இளமரக்காட்டின் நடுவே புதிய கலைக் கனவாக அவர் மாளிகை அமைந்திருந்தது. உலகின் பலபகுதிகளிலிருந்தும் வரவழைக்கப்பட்ட வண்ணப்பறவைகள் நூற்றுக்கணக்கான கூடுகளை அலங்கரித்தன. அவர் நூலகம் பெரியது; கவர்ச்சியானது. ஐரோப்பிய நாடுகளின் பலபகுதிகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட பலமொழி இலக்கியச் செல்வங்கள், வரிசைப்படுத்தப்பட்டு, கண்ணாடிச்சட்டமிட்ட மஹாகனி பீரோக்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அர்ஜெண்டைனா நாட்டு அரசியலையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த நடாலியா பொடானாவின் எதிரில் இருந்த மேசையின் இருபக்கத்தில் நானும் லார்காவும் அமர்ந்திருந்தோம். நடுவில் அந்த நாட்டுப் பெண்கவிஞர் ஒருவரும் அமர்ந்திருந்தார். இளவேனில் நங்கையான அவள் தன் பசிய பசித்த கண்களால் என்னையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் அவளைச்சுற்றி ஒரு காந்தமண்டலத்தையே நோற்றுவித்துக் கொண்டிருந்தன. அவள் பெருமூச்சு என் உள்ளத்து நெருப்பைப் போர்த்திருந்த சாம்பலை ஊதிக்கனன்று எரியச் செய்து கொண்டிருந்தது. தோலோடு சேர்த்துச் சுட்டெடுத்த மாட்டிறைச்சியின் மணமும்