பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்0128

சுற்றியிருந்த சொகுசு வாழ்க்கையின் மணமும் எங்களை லேசாக்கி வானில் மிதக்கவிட்டன.

“விருந்து முடிந்ததும் கவிஞர் மூவரும் சிரிப்பும், கெக்கலிப்புமாகத் தோட்டத்தின் கோடியில் இருந்த நீச்சல் குளத்தை நோக்கிச் சென்றோம். லார்கா மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டு முன்னால் சென்றான். மகிழ்ச்சியே லார்காவின் உடம்பு. நீச்சற் குளத்தருகில் ஒரு தும்புக் கோபுரம் இருந்தது. அதன் மீது மூன்று கவிஞர்களும் ஏறினோம். வெண்மையான அக் கோபுரத்தின் உச்சி, விளக்கொளியில் முத்தாகக் காட்சியளித்தது. உச்சியில் இருந்த வேலைப்பாட்டுடன் கூடிய சாளரங்கள் வழியாக நாங்கள் வெளியுலகை எட்டிப் பார்த்தோம். நீச்சற் குளத்தில் பிரதிபலித்த ஒளிக்கண்கள், கீழிருந்து எங்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தன. மொய்த்திருக்கும் விண்மீன்களோடு எங்களைப் போர்த்து மூழ்கடிப்பது போல், இரவு நெருக்கமாக எங்கள் மீது தொங்கிக்கொண்டிருந்தது. கிதாரோடு கூடிய பாட்டிசை அலை அலையாகிக் காற்றில் மிதந்து வந்து எங்கள் காதில் விளையாடியது. அருகில் இருந்த தங்கக்கொடி மெதுவாக என் நெஞ்சில் படரத் தொடங்கியது...”

1984-இல் நெருடா ஸ்பெயின் நாட்டின் தூதராக நியமனம் செய்யப்பட்டார். அங்கிருந்தபோது, கவிஞர் லார்காவோடும், ரஃபேல் ஆல்பெர்டி என்ற நண்பரோடும் நெருங்கிப் பழகிய காரணத்தால் நெருடாவிற்கு அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது. 1934-இல் ரஃபேல் ஆல்பெர்டியின் வீட்டைப் பாசிஸ்டுகள் அழித்து நாசப்படுத்தினர். 1936-இல் ஸ்பெயினில் நடை பெற்ற உள்நாட்டுப் போரின் போது, அரசியல் காரணங்களுக்காகக் கவிஞர் லார்கா கொல்லப்பட்டார். இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் நெருடாவின் உள்ளத்தில் ஆறாத புண்களை ஏற்படுத்தின. தமது எதிர்ப்பைப் பத்திரிகைகளில் வெளியிட்டார் நெருடா:

வஞ்சகத் தளபதிகளே!
நாசமாக்கப்பட்ட
எனது வீட்டை-
சிதறிய ஸ்பெயினைப்
பாருங்கள்!
ஒவ்வொரு வீட்டிலும்
பூக்களுக்குப் பதிலாக
எரியும்-
உலோகக் குழம்பு
வழிந்து கொண்டிருக்கிறது-

என்று கவிதையில் குமுறினார். அப்போது ஸ்பெயினை ஆண்ட அதே தேசியக்கட்சி (Nationalist Party) சிலியிலும்