பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33முருகு சுந்தரம்

கத்தோலிக்க சமயத்தை ஏற்றுக் கொண்டு பாவ மன்னிப்பு பெறுகிறான்.

ரெம்போவின் கவிதைகள் ‘நரகத்தில் ஒரு பருவம், [1](A Season In Hell) வெளிசங்கள் (Illuminations) என்ற இரண்டு தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. நரகத்தில் ஒரு பருவத்தைத் ‘தன் படைப்புக்களின் வெற்றி’ என்று தன் நண்பன் பால் டெர்னிக்கு எழுதிய கடிதத்தில் அவன் குறிப்பிடுகிறான். 1873 ஆம் ஆண்டுக் கோடையில் இந்நூல் எழுதப்பட்டு, 1875 ஆம் ஆண்டில் அவனுடைய சொந்தச் செலவில் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலை அச்சில் காண அவன் மிகவும் விரும்பினான். கவிதைத் தொழிலைக் கைவிட்டுவிட்டுப் பிழைப்புக்காக மத்தியக் கிழக்கு நாடுகளில் அவன் சுற்றித் திரிந்த போது, அவனுடைய நண்பர்களும் பாரிசு நகர இலக்கியவாதிகளும் கூடி 1868-இல் ‘வெளிச்சங்கள்’ என்ற அவனது இரண்டாம் கவிதைத் தொகுதியை வெளியிட்டனர். அப்போது ரெம்போவின் நடமாட்டத்தைப் பற்றி அறியாத காரணத்தால் அவன் இறந்துவிட்டதாகவே எல்லாரும் நினைத்தனர்.

ரெம்போவின் இரண்டு கவிதைத் தொகுதிகளில் எது முதலில் எழுதப்பட்டது என்ற சர்ச்சை பிரெஞ்சு இலக்கிய வாதிகளிடையே நீண்ட நாட்களாக இருந்து கொண்டிருக்கிறது. வெளிச்சங்களில் சில கவிதைகளை எழுதிய பிறகு, நடுவில் நரகத்தில் ஒரு பருவத்தைத் தொடங்கி முடித்துவிட்டு, மீதி வெளிச்சங்களைப் பிறகு எழுதியிருக்க வேண்டும் என்று பொதுவாகக் கருத இடமிருக்கிறது.

‘நரகத்தில் ஒருபருவம்’ என்ற கவிதைத் தொகுதி உளவியல் பூர்வமான அவனுடைய தன்வரலாறு என்று குறிப்பிடலாம். பிள்ளைப் பிராயத்திலும், பள்ளிப்பருவத்திலும், அடக்கு முறையால் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பும், தனிமையிலும் வெர்லேனுடனும் நகரங்களில் பொறுப்பின்றிச் சுற்றித்திரிந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், அவற்றின் பாதிப்பால் அடிமனத்தில் ஏற்பட்ட அதிர்வுகளும் மிகநுட்பமாக இப்பாடல்களில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. பதினான்கு வயதுச் சிறுவனின் முதிர்ந்தும் முதிராத விடலைக் கனவுகளும், எதிர்காலத்தில் வெடிக்கவிருக்கும் அவனது பூகம்பக் கவிதையாற்றலும், கட்டுக்களை அறுத்துக் கொண்டு பாயத்துடிக்கும் அவன் சுதந்திர வெறியும் இக்கவிதைத் தொகுதியில் போட்டியிடுகின்றன. இத்தொகுதிக்கு ரெம்போ சூட்டிய பெயர் ‘கதைகள்’ (Stories)

இந்நூலின் பாயிரத்தில் சைத்தானிடத்தில் அவன் பேசுவதாக ஒரு பகுதி இருக்கிறது. அதில், தான் தெய்வீகக் காதலைக்

  1. பிரெஞ்சில் 'உய்ன் செசோம் ஆஆம்பேர்’ என்று உச்சரிக்கவேண்டும்.