பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்48

பணி ரில்க்‘ அவரிடமிருந்து தம் உள்ளொளியால் ஒரு கவிதைப்பாணியைக் கற்றுணர்ந்தார். அக்கவிதைக்குக் கருப் பொருள் கிடையாது. கவிஞன் ஆழ்ந்த தனிமையில் இருக்கும் போது, அது தனக்குரிய கருவைத் தானே படைத்து வெட்ட வெளியில் எடுத்து நிறுத்த வேண்டும். அதைக் கருக்கவிதை (Poems of Things) என்று ரில்க் குறிப்பிடுகிறார். டபிள்யூ. எச். ஆடன் அதைப் பற்றிக் குறிப்பிடும்போது.

வாழ்க ரில்க்கின் கருக்கவிதை
அது தனிமையின் சாந்தா க்ளாஸ்![1]

என்று பாராட்டுகிறார்.

ரில்க்கின் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் அவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, “ரில்க் தமது நேரங்களைப் பொருட்காட்சிச் சாலைகளிலும், நூலகங்களிலும் பூங்காக்களிலும் கழிப்பார். இரவு நேரங்களில் வீதிகளிலும், மந்தை வெளிகளிலும், சீன் நதிப் பாலத்தின் மீதும் தனிமையில் சிந்தனையோடு சுற்றித் திரிவார்” என்று கூறுகிறார்.

தனிமை ரில்க்கிற்குப் பிரியமான ஒன்று. தனிமையை அவர் உணர்ந்தது மட்டுமல்லாமல் அதைப் போற்றிச் சுவைத்தார்; மாதாகோவில் தொழுகையின்போது அமைதியாக எழுப்பப்படும் இனிய இசையாக அதைக் கருதினார். தனிமை தன்னை வாட்டுவதாக இளங்கவிஞர் ஒருவர் ரில்க்கிற்கு எழுதிய போது, தனிமை- உள்ளார்ந்த பரந்த தனிமைதான் கவிஞனுக்கு வேண்டும். நமக்குள்ளேயே நாம், நீண்டநேரம் ஒருவரையும் எதிர்ப்படாமல் தனிமையில் நடக்க வேண்டும். அதுதான் நாம் அடைய வேண்டிய இன்பத்தின் எல்லை. தனிமை, குழந்தையின் தனிமையைப் போல் இருக்க வேண்டும். குழந்தை, தனக்குள்ளிருந்து வெளியுலுதைப் பார்ப்பது போல், கவிஞன் தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, தனிமையின் உதவியோடு வெளியுலகைப் பார்க்க வேண்டும். அது தான் கவிஞனின் பணி, தரம், தொழில்” என்று அவனுக்கு அறிவுரை வழங்குகிறார்.

எவன் உறுதியாக நடுவில் நிலைத்திருக்கிறானோ, அவனே வீரன்’ என்ற எமர்சனின் பொன்மொழி ரில்க்கிற்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ரில்க் ஓயாமல் உழைத்தார். துன்பத்துக்கு இலக்கான தம் தொடக்க நிலையிலிருந்து, படைப்பாற்றலை இடைவிடாது வெளிப்படுத்தும் தேவதையாகத் தம்மை உயர்த்திக் கொண்டார்.

  1. கிறிஸ்துமஸ் பரிசுகளைக் குழந்தைகளுக்குக் கொண்டுவரும் கொழுத்த சிவப்புக் கிழவன்; இவனைக் கிறிஸ்துமஸ் தாத்தா என்றும் சொல்லுவர்
    அவன் அளவற்ற பரிசுகளைக் குழந்தைகளுக்கு வாரிக்கொடுப்பதுபோல், தனிமை ரிலிக்கிற்கு அழகான கருக்கவிதைகளை வாரி வழங்கியதாகப் பொருள் கொள்ள வேண்டும்,