பக்கம்:புகழ்மாலை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

புகழ் மாலை


திருத்தத்தில் வெற்றிபெற்றான் ஒட்டக் கூத்தன்
      தீர்ப்பளித்து வெற்றிபெற்றான் கரிகாற் சோழன்
நிருத்தத்தில் வெற்றிபெற்றான் ஆட்டனத்தி
      நிதியளித்து வெற்றிபெற்றான் பாரி வள்ளல்
வருத்தத்தில் வெற்றிபெற்றார் வடலூர் வள்ளல்
      வாளேந்தி வெற்றிபெற்றான் சேர லாதன்
விருத்தத்தில் வெற்றிபெற்றான் கம்பன்; அந்த
     வெற்றியினை இவர்பெற்றார் என்னைப் போல.

படைநடத்தல் போல்நடக்கும் நடையும்; சங்கப்
      பழந்தமிழ்நூல் அடையாள நடையும்; பாட்டின்
இடையிடையே இசையசைவு நடையும்; ஒடை
      ஏந்திவரும் அலைநடையும் கூட்டிக் காட்டி
மடைதிறந்த வெள்ளம்போல் கவிதை தந்தார்
      மலைபோன்று தலைநிமிர்ந்த உவமை தந்தார்.
தடைநடையே அவரெழுத்தில் இல்லை. வாழைத்
      தண்டுக்கா தடுக்கின்ற கணுக்கள் உண்டு?

சூரியனைக் கிழக்கேபார்; பாவின் வேந்தர்
     சுடர்விளக்கை நீ, 'குடும்ப விளக்'கி'லேபார்
ஓரிரவை அண்ணாவின் எழுத்தி லேபார்
     உயர்கருத்தை எதிர்பாரா முத்தத்தில் பார்
நேரிழையார் நிலாமுகத்தில் சிரிப்பை நீபார்
     நீயதனை அவரழகின் சிரிப்' பிலேபார்
பாரியவன் சுனையதனில் குளிரை நீபார்
    பாரதிதா சன்நூலில் வீரத் தைப்பார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/24&oldid=1491658" இலிருந்து மீள்விக்கப்பட்டது